‘பலே’ நடவடிக்கை! பி.ஏ.பி., வாய்க்காலில் தண்ணீர் திருட்டு தடுக்க... கண்காணிப்பு குழுவில் விவசாயிகளை சேர்க்க உத்தரவு
திருப்பூர்: பி.ஏ.பி., அமராவதி மற்றும் கீழ்பவானி பாசன திட்டப் பகுதிகளில், நீர் திருட்டை தடுத்து, கடைமடை வரை தண்ணீர் செல்வதை உறுதி செய்ய, கூட்டுக் கண்காணிப்புக் குழுவில் விவசாயிகளையும் உறுப்பினர்களாக சேர்க்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். பி.ஏ.பி., அமராவதி மற்றும் கீழ்பவானி பாசனத் திட்டங்களின் பிரதான மற்றும் பகிர்மானக் கால்வாய்களில் இருந்து சட்டவிரோதமாக நீர் எடுப்பதை தடுக்கவும், நீர் திருட்டுக்கு பயன்படுத்தப்படும் மின் மோட்டார் மற்றும் குழாய்களை அப்புறப்படுத்தவும், வருவாய்த்துறை, காவல்துறை, நீர்வளத்துறை, மின்வாரிய அலுவலர்கள் அடங்கிய கூட்டுக் கண்காணிப்புக் குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ‘பல்வேறு இடங்களில், நீர் திருட்டு தொடர்வதால் கடைமடைக்கு தண்ணீர் சென்று சேர்வதில்லை; அரசு அலுவலர்கள் அடங்கிய குழு சரிவர செயல்படவில்லை’ என விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். கடந்த மாதம், 28ல் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வேலுசாமி, விஜயசேகரன், விவேகானந்தன், சுரேஷ், ராமலிங்கம், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட விவசாயிகள், ‘நீர் திருட்டு தடுக்க, இக்குழுவில் பாசன ஆயக்கட்டுதாரர்களையும் சேர்க்க வேண்டும்,’ என கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.
அதன் விளைவாக, கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே பிறப்பித்துள்ள உத்தரவில், ‘பி.ஏ.பி., அமராவதி மற்றும் கீழ்பவானி பாசன கூட்டுக் கண்காணிப்புக் குழுக்களில் பாசன சபை தலைவர்கள் மற்றும் விருப்பமுள்ள ஆயக்கட்டு விவசாயிகள் (கிராமத்திற்கு அதிகபட்சம் 5 நபர்கள்) உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுவர்,’ என கூறியுள்ளார்.–––




