8.9.1976: சர்க்காரியா கமிஷன் தினசரி விசாரணை சென்னையில் அக்டோபர் மாதம் நடக்கலாம்
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
சென்னை, செப். 7 - முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் ஏழு தி.மு.க. மாஜி அமைச்சர்கள் மீது கூறப்பட்டுள்ள ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக சுப்ரீம் கோர்ட் நீதிபதி சர்க்காரியா தலைமையில் ஒரு நபர் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் கமிஷன் தனது தினசரி விசாரணையை இம்மாதக் கடைசியிலோ அல்லது அக்டோபர் மாதம் முதல் வாரத்திலோ சென்னையில் தொடங்கும் என்று இப்போது கிடைத்துள்ள தகவல்களிலிருந்து தெரிகிறது. வருகிற சனிக்கிழமை (11ம் தேதி) விசாரணைக் கமிஷனின் கூட்டம் டில்லியில் நடைபெறும்போது இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.
நேர்முக சாட்சியங்களின் பதிவு சென்னையிலும், பிரமாண வாக்குமூலங்களாக தஸ்தாவேஜுகள் மூலமாக (அபிடவிட்) தாக்கல் செய்யும் சாட்சியங்கள் டில்லியிலும் நடைபெறும் என்று அறியப்படுகிறது. நேர்முகமாக சாட்சியம் சொல்ல வருகிறவர்களின் வசதி, விசாரணைக்கு ஆதாரமாகத் தேவைப்படும் ஏராளமான தஸ்தாவேஜுகள், ரிகார்டுகள் ஆகியவற்றை டில்லிக்கு எடுத்துச் செல்வதில் உள்ள சிரமங்கள் ஆகியவற்றைக் கருதி தினசரி விசாரணையை சென்னையில் வைத்துக் கொள்வதே உசிதமென்று கருதப்படுகிறது. எனவே நேர்முக சாட்சியப் பதிவு, விசாரணையை சென்னையில் வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





