“பேருந்து நிலையத்துக்கு இடமில்லை... வணிக வளாகம் கட்ட அவசரம் ஏன்?”
மாற்றங்களைக் கொண்டுவருவதாகக் கூறி ஆட்சி அமைத்திருக்கும் த.வெ.க அரசு, தி.மு.க ஆட்சியில் திட்டமிடப்பட்ட இந்த வணிக வளாகத்தை நிறுத்தாமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகளை நிறுத்துவதற்கும், வெளியே செல்வதற்கும் போதிய இடவசதி இல்லை. இதனால், பேருந்துகள் சாலையில் நிற்பதும், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இதற்குத் தீர்வு காண, பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்துவரும் நிலையில், அதற்குப் பயன்படுத்தவேண்டிய இடத்தில் ரூ.8.3 கோடி மதிப்பில் 28 கடைகள்கொண்ட வணிக வளாகம் கட்டும் பணிகள் தொடங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
தஞ்சாவூர் நகரின் மையப்பகுதியிலுள்ள பழைய பேருந்து நிலையம், அ.தி.மு.க ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முற்றிலும் இடிக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்டது. ஆனால், நகரப் பேருந்துகளை நிறுத்தவும், வெளியேறவும் போதிய இடவசதி இல்லாததால், பேருந்து நிலையத்துக்கு எதிரே தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது.
பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள சுமார் 40,000 சதுர அடி இடத்தில் முன்பு டூ வீலர் ஸ்டாண்ட் இருந்தது. அந்த இடத்தை, பேருந்து நிலைய விரிவாக்கத்துக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், தற்போது வணிக வளாகம் கட்டும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. இதற்கு காங்கிரஸ், அ.ம.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகளும், சிறு வியாபாரிகளும் எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் போராட்டம் நடத்தினார்கள். அத்துடன், “மக்கள் நலனைவிட கமிஷனுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது” என்றும் குற்றம்சாட்டினார்கள்.



