Politics
“பேருந்து நிலையத்துக்கு இடமில்லை... வணிக வளாகம் கட்ட அவசரம் ஏன்?”
மாற்றங்களைக் கொண்டுவருவதாகக் கூறி ஆட்சி அமைத்திருக்கும் த.வெ.க அரசு, தி.மு.க ஆட்சியில் திட்டமிடப்பட்ட இந்த வணிக வளாகத்தை நிறுத்தாமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகளை நிறுத்துவதற்கும், வெளியே செல்வதற்கும் போதிய இடவசதி இல்லை. இதனால், பேருந்துகள் சாலையில் நிற்பதும், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இதற்குத் தீர்வு காண, பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்துவரும் நிலையில், அதற்குப் பயன்படுத்தவேண்டிய இடத்தில் ரூ.8.3 கோடி மதிப்பில் 28 கடைகள்கொண்ட வணிக வளாகம் கட்டும் பணிகள் தொடங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
தஞ்சாவூர் நகரின் மையப்பகுதியிலுள்ள பழைய பேருந்து நிலையம், அ.தி.மு.க ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முற்றிலும் இடிக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்டது. ஆனால், நகரப் பேருந்துகளை நிறுத்தவும், வெளியேறவும் போதிய இடவசதி இல்லாததால், பேருந்து நிலையத்துக்கு எதிரே தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது.
பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள சுமார் 40,000 சதுர அடி இடத்தில் முன்பு டூ வீலர் ஸ்டாண்ட் இருந்தது. அந்த இடத்தை, பேருந்து நிலைய விரிவாக்கத்துக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், தற்போது வணிக வளாகம் கட்டும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. இதற்கு காங்கிரஸ், அ.ம.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகளும், சிறு வியாபாரிகளும் எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் போராட்டம் நடத்தினார்கள். அத்துடன், “மக்கள் நலனைவிட கமிஷனுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது” என்றும் குற்றம்சாட்டினார்கள்.
இது குறித்து சி.பி.எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமாரிடம் பேசியபோது, “கடந்த தி.மு.க ஆட்சியின் இறுதியில், அந்த இடத்தில் ரூ.8.3 கோடியில் 28 கடைகள் கட்ட டெண்டர் விடப்பட்டது. அப்போதே எதிர்ப்பு கிளம்பியது. த.வெ.க ஆட்சி அமைந்த பிறகு டூ வீலர் ஸ்டாண்டை அகற்றிய அதிகாரிகள், பேருந்து நிலையத்தை விரிவாக்கப்போவதாகத் தெரிவித்தனர். இதனால் நெரிசலுக்குத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், கடந்த ஆட்சியில் விடப்பட்ட டெண்டர் அடிப்படையில் மீண்டும் வணிக வளாகம் கட்டும் பணி தொடங்கியிருக்கிறது. அதிகாரிகளிடம் மனு அளித்ததையடுத்து பணியை நிறுத்துவதாகத் தெரிவித்தனர். ஆனால், டெண்டர் எடுத்தவர் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டுவருகிறார்.
மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டே திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். த.வெ.க அரசு மக்களுக்கான அரசு என்று கூறிக்கொண்டாலும், பேருந்து நிலைய விரிவாக்கத்தை மேற்கொள்ளாமல் கமிஷனுக்காக, கடைகள் கட்டப்படுவதைத் தடுக்கவில்லை” என்றார்.
அ.ம.மு.க மாநகரச் செயலாளர் ராஜேஸ்வரனிடம் பேசினோம். “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட காமராஜர், சரபோஜி மார்க்கெட்டுகளில் அதிக வாடகை காரணமாக ஏராளமான கடைகள் காலியாக இருக்கின்றன. புதிய, பழைய பேருந்து நிலையங்களிலும் கடைகள் மூடப்பட்டுள்ளன. தஞ்சாவூரில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் காலியாக இருக்கும் நிலையில், கீழவாசல் ரோட்டில் ரூ.130 கோடி மதிப்பில் மல்டிஃபிளெக்ஸ் வணிக வளாகம் கட்டப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே இத்தனை கடைகள் காலியாக இருக்கும் நிலையில், கீழவாசல் சாலையில் வேறு ஒரு பிரமாண்ட வணிக வளாகம் கட்டப்படும் என்று அறிவித்துவிட்டு, பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே புதிதாக 28 கடைகளைக் கட்டுவதன் அவசியம் என்ன... கடைகள் கட்டுவதற்கு பதிலாக, பேருந்து நிலையத்தை விரிவாக்குவதற்கு இந்த இடத்தைப் பயன்படுத்தினால், போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண முடியும்.
தற்போதைய பேருந்து நிலையத்தில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் போதுமானதாக இல்லை. பேருந்துகளை நிறுத்தவும், வெளியே செல்லவும் போதிய இடவசதி இல்லாததால், பேருந்து நிலையத்துக்கு எதிரே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் திணறுகின்றனர். தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுற்றுலாப்பயணிகளும் வரும் நிலையில், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். பயணிகள் தங்கும் விடுதியும் அமைக்க வேண்டும்.
மாற்றங்களைக் கொண்டுவருவதாகக் கூறி ஆட்சி அமைத்திருக்கும் த.வெ.க அரசு, தி.மு.க ஆட்சியில் திட்டமிடப்பட்ட இந்த வணிக வளாகத்தை நிறுத்தாமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது. இந்தத் திட்டத்தைக் கைவிடவில்லை என்றால், ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து தொடர் போராட்டம் நடத்துவோம்” என்றார்.
இது குறித்து தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் வெ.தீபனா விஸ்வேஸ்வரியிடம் பேசினோம். “தஞ்சாவூர் நகரம் வளர்ச்சியடைந்திருக்கும் நிலையில், கடைகளும் தேவைப்படுகின்றன. எனவே, அரசு ஏற்கெனவே திட்டமிட்டபடி வணிக வளாகத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. போக்குவரத்து நெரிசலைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிக வாடகை காரணமாக கடைகள் காலியாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், வாடகையைக் குறைப்பது தொடர்பாகக் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. இதை அரசு பரிசீலித்துவருகிறது. மக்கள் நலனைக் கருத்தில்கொண்டே திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன” என்றார்.
மக்களைத் தவிக்கவிடுவதற்குப் பெயர்தான் மக்கள் நலனா?
