ஆதவ் அர்ஜுனா ரிஷிமூலம்!
தமிழ்நாட்டின் முதல் போட்ட அமைச்சராக வலம்வரும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் ஒரு விவாதத்தில் பேசும்போது, "நான் பிறந்தது வேலூர் மாவட்டமல்ல, திருச்சியில்' எனப் பதிவு செய்தார். அதன்பின் மற்றொரு விவாதத்தில் "எனது ஊர் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகிலுள்ள ஊர்' எனப் பதிவு செய்தார். ஏன் இந்த தடுமாற்றம்? உண்மையில் ஆதவ் அர்ஜுனாவின் சொந்த ஊர் எது? எதனால் தன் பூர்வீகத்தை மறைக்கிறார்? என விசாரணையில் இறங்கினோம்.
வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த தொண்டான்துளசி என்கிற கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்தது கல்யாணியின் குடும்பம். கல்யாணியின் அப்பா காவல்துறையில் பணியாற்றியதால் குடும்பம் சென்னையில் செட்டிலாகிறது. புரோக்கர்கள் வழியாக ரெட்டி சமூகத்தை சேர்ந்த ராஜேந்திரன் -கல்யாணி இடையே 1980-ல் திருமணம் நடக்கிறது. இந்த தம்பதிக்கு 1982-ல் மகன் பிறக்கிறார். அவருக்கு செந்தில்குமார் எனப் பெயர் வைக்கின்றனர். அவர்தான் ஆதவ் அர்ஜுனா. ஆதவ் அர்ஜுனாவின் ஊர் என்னவோ தொண்டான்துளசிதான். தலைப்பிரசவம் தாய் வீட்டில் நடக்கும். கல்யாணியின் சகோதரர் ராமமூர்த்தி பெல் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். அதனால் சென்னையிலிருந்து குடும்பம் திருச்சிக்கு மாறியிருந்தது. அதனால் கல்யாணியின் முதல் பிரசவம் திருச்சியில் நடைபெற்றது. செந்தில்குமார் என்கிற ஆதவ் அர்ஜுனா திருச்சியில் ஒரு மருத்துவமனையில் பிறந்தார்.
அடுத்ததாக 3 ஆண்டுகளுக்கு பின்னர் 1985-ல் மகள் பிறக்கிறார். சீதாலட்சுமி எனப் பெயர் வைத்து வளர்க்கின்றனர். 1987-ல் குடும்பப் பிரச்சனையால் கல்யாணி தீக்குளித்து இறந்துபோகிறார். இதனால் குழந்தைகள் இருவரும் தாயில்லாப் பிள்ளையாக நிற்கின்றனர். அப்போது, இறந்த கல்யாணியின் சித்தி மகளான திலகவதி ஐ.பி.எஸ். பஞ்சாயத்து பேசி கல்யாணியின் சகோதரர் ராமமூர்த்தியிடம் வளர்க்கச்சொல்லி ஒப்படைக் கிறார். அவரும் இரண்டு குழந்தைகளையும் தன் குழந்தைகளாக நினைத்து வளர்க்கிறார். திருச்சியில் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தவர், கல்லூரிப் படிப்புக்காக சென்னை தாம்பரம் கிருஸ்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். கூடைப்பந்து விளையாட்டில் பங்கெடுத்தவர், மாநில அளவிலான போட்டிகளில் விருதுகள் பெற்றுள்ளார். அப்படியே மாநில, தேசிய சங்கத்தின் நிர்வாகப் பதவிகளில் அமர்ந்துவிடுகிறார். படித்து வளர்ந்த அந்த இளைஞன்தான் இன்று த.வெ.க. அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் ஆதவ் அர்ஜுனா.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


