ஆதவ் அர்ஜுனா ரிஷிமூலம்!

தமிழ்நாட்டின் முதல் போட்ட அமைச்சராக வலம்வரும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் ஒரு விவாதத்தில் பேசும்போது, "நான் பிறந்தது வேலூர் மாவட்டமல்ல, திருச்சியில்' எனப் பதிவு செய்தார். அதன்பின் மற்றொரு விவாதத்தில் "எனது ஊர் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகிலுள்ள ஊர்' எனப் பதிவு செய்தார். ஏன் இந்த தடுமாற்றம்? உண்மையில் ஆதவ் அர்ஜுனாவின் சொந்த ஊர் எது? எதனால் தன் பூர்வீகத்தை மறைக்கிறார்? என விசாரணையில் இறங்கினோம்.
வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த தொண்டான்துளசி என்கிற கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்தது கல்யாணியின் குடும்பம். கல்யாணியின் அப்பா காவல்துறையில் பணியாற்றியதால் குடும்பம் சென்னையில் செட்டிலாகிறது. புரோக்கர்கள் வழியாக ரெட்டி சமூகத்தை சேர்ந்த ராஜேந்திரன் -கல்யாணி இடையே 1980-ல் திருமணம் நடக்கிறது. இந்த தம்பதிக்கு 1982-ல் மகன் பிறக்கிறார். அவருக்கு செந்தில்குமார் எனப் பெயர் வைக்கின்றனர். அவர்தான் ஆதவ் அர்ஜுனா. ஆதவ் அர்ஜுனாவின் ஊர் என்னவோ தொண்டான்துளசிதான். தலைப்பிரசவம் தாய் வீட்டில் நடக்கும். கல்யாணியின் சகோதரர் ராமமூர்த்தி பெல் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். அதனால் சென்னையிலிருந்து குடும்பம் திருச்சிக்கு மாறியிருந்தது. அதனால் கல்யாணியின் முதல் பிரசவம் திருச்சியில் நடைபெற்றது. செந்தில்குமார் என்கிற ஆதவ் அர்ஜுனா திருச்சியில் ஒரு மருத்துவமனையில் பிறந்தார்.
அடுத்ததாக 3 ஆண்டுகளுக்கு பின்னர் 1985-ல் மகள் பிறக்கிறார். சீதாலட்சுமி எனப் பெயர் வைத்து வளர்க்கின்றனர். 1987-ல் குடும்பப் பிரச்சனையால் கல்யாணி தீக்குளித்து இறந்துபோகிறார். இதனால் குழந்தைகள் இருவரும் தாயில்லாப் பிள்ளையாக நிற்கின்றனர். அப்போது, இறந்த கல்யாணியின் சித்தி மகளான திலகவதி ஐ.பி.எஸ். பஞ்சாயத்து பேசி கல்யாணியின் சகோதரர் ராமமூர்த்தியிடம் வளர்க்கச்சொல்லி ஒப்படைக் கிறார். அவரும் இரண்டு குழந்தைகளையும் தன் குழந்தைகளாக நினைத்து வளர்க்கிறார். திருச்சியில் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தவர், கல்லூரிப் படிப்புக்காக சென்னை தாம்பரம் கிருஸ்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். கூடைப்பந்து விளையாட்டில் பங்கெடுத்தவர், மாநில அளவிலான போட்டிகளில் விருதுகள் பெற்றுள்ளார். அப்படியே மாநில, தேசிய சங்கத்தின் நிர்வாகப் பதவிகளில் அமர்ந்துவிடுகிறார். படித்து வளர்ந்த அந்த இளைஞன்தான் இன்று த.வெ.க. அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் ஆதவ் அர்ஜுனா.
ஆதவ் அர்ஜுனாவின் அப்பா ராஜேந்திரன், தொண்டான்துளசி கிராமத்தில் தனது இரண்டாவது மனைவியோடு வசித்துவருகிறார். இப்போது விவசாயம் செய்பவர், இதற்கு முன்பு வேலூரின் பிரபலமான சுவாமி ஸ்வீட்ஸ் கடையில் கேஷியராக வேலை செய்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு வேலையிலிருந்து நின்றுவிட்டார். வாரத்தில் ஒருநாள் வேலூர் மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகளை வாங்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று விற்பனை செய்துவருகிறார். ராஜேந்திரனுக்கும், அவரது இரண்டாவது மனைவிக்கும் ஒரு மகன் இருக்கிறார். எலக்ட்ரிக்கல் வேலை செய்துவந்த அவர், முன்பு தி.மு.க.வில் இருந்தார். இப்போது அண்ணன் ஆதவ் அர்ஜுனா த.வெ.க.வில் அமைச்சரானதும், தம்பியும் த.வெ.க.வில் இணைந்துவிட்டார்.
கூடைப்பந்து வீரராக இருந்த செந்தில் குமார், ஜிம் ட்ரைனராகவும் இருந்துவந்துள்ளார். அப்போது ஜிம்முக்கு வந்த லாட்டரி மார்ட்டினின் மகள் டெய்சியுடன் நட்பு ஏற்பட்டு காதலாகியுள்ளது. சாதாரண செந்தில்குமாரை பெரும் கோடீஸ்வரக் குடும்பமான மார்ட்டின் குடும்பம் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. டெய்சியின் பிடிவாதத்தால் செந்தில்குமார் மதம் மாற்றப்பட்டார் என்கிறார்கள். தனது பெயரை ஆதவ் அர்ஜுனா என மாற்றிக்கொண்டு, லாட்டரி மார்ட்டின் மகளை திருமணம் செய்துகொண்டார். தனது திருமணத்துக்கு தந்தையைக்கூட அழைக்கவில்லை ஆதவ் அர்ஜுனா. ஆதவ் அர்ஜுனா கல்லூரி முடித்த 2002ஆம் ஆண்டு ஒருமுறை தொண்டான்துளசிக்கு வந்து தனது தந்தையை சந்தித்துவிட்டுச் சென்றுள்ளார். "2003-ல் தனது தந்தையுடன் பேசியுள்ளார், அதன்பின் சந்திக்கவுமில்லை, பேசவுமில்லையாம். செல்போன் வழியாகக்கூட தன் தந்தையுடன் பேசுவதில்லைன்னு தான் சொல்வாரு' என அவரது உறவினர்கள் கூறுகிறார்கள்.
அவர் தன்னுடைய அப்பாவுடன்தான் பேசுவதில்லையே தவிர, இங்குள்ள தனது ரெட்டி சாதியினருடன் நெருக்கமாகவே இருந்துவருகிறார் என்கிறார்கள். "தமிழ்நாட்டின் பிரபலமான சர்ச்சைக்குரிய தொழிலதிபர் சேகர் ரெட்டியின் சொந்த ஊரும் தொண்டான்துளசி தான். சேகர் ரெட்டியும், ஆதவ் அர்ஜுனாவின் அப்பாவும் உறவினர்கள்தான். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க.வை சேர்ந்த காட்பாடி முன்னாள் எம்.எல்.ஏ. ரகுபதி ரெட்டியாரின் மகன் முரளி என்பவரை இங்குள்ள ரெட்டி சங்கத்தின் வழியாக அவரின் மொபைல் எண்ணை வாங்கி தொடர்பு கொண்டார் ஆதவ் அர்ஜுனா. இருவரும் பங்காளிகள். முரளியிடம் "த.வெ.க. வேட்பாளராகக் களமிறங்குங்க, கண்டிப்பா ஜெயிச்சிடுவீங்க. நீங்க ஒருரூபாய் கூட செலவு செய்யத் தேவையில்லை, மொத்த செலவையும் நான் பார்த்துக்கறேன்'னு சொன்னாரு. த.வெ.க. ஆட்சிக்கு எங்க வரப் போகுதுன்னு அவர் கேட்டுக்கல. த.வெ.க. ஆட்சி அமைந்து ஆதவ் பவர்ஃபுல் அமைச்சரானதும் ஊரிலுள்ள ரெட்டி சமூகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் சேகர் ரெட்டி, மேத்தா ரெட்டி போன்றோர் ஆதவ்வை சந்தித்து வாழ்த்து தெரிவிச்சிட்டு வந்தோம். இப்பவும் சேகர் ரெட்டி தன் மகளின் திருமண வரவேற்புக்கு ஆதவை அழைச்சிருக்காரு'' என விவரித்தார்கள்.
காட்பாடி பகுதி த.வெ.க.வினருடன் பேசியபோது, தொண்டான்துளசி கிராமத்தில் தனது அம்மா கல்யாணிக்கு சிலை வைக்க முடிவு செய்து கே.வி.குப்பம் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. தென்றல்குமாரிடம் சிலை வைக்க இடம் பார்க்கச் சொன்னதாகத் தெரிகிறது என்கிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)