அச்சிறுபாக்கம் தாலுகாவை உருவாக்கும் பரிந்துரை கிடப்பில்! 5 ஆண்டுகளாக பரிதவிக்கும் 30 கிராம மக்கள்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரிய தாலுகாவாக உள்ள மதுராந்தகத்தை இரண்டாக பிரித்து, அச்சிறுபாக்கத்தை தலைமையிடமாக கொண்டு புதிதாக தாலுகா அமைக்கக்கோரி, மாவட்ட நிர்வாகம் அரசுக்கு அனுப்பிய பரிந்துரை ஐந்து ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. துாசு கூட தட்டாமல் அப்படியே போடப்பட்டுள்ளதால், 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய ஏழு தாலுகாக்கள் உள்ளன. இதில், மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகாக்களில், அதிகமான கிராமங்கள் உள்ளன.
மதுராந்தகம் தாலுகாவில் உள்ள அனந்தமங்கலம் கிராமம், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் இலவச வீட்டுமனை பட்டா, விவசாய நிலங்களுக்கு பட்டா மற்றம், வாரிசு சான்றிதழ், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு ஜாதி, இருப்பிடம், வருமான சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக, 50 கி.மீ., துாரம் உள்ள மதுராந்தகம் தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.




