இருள் சூழ்ந்த ரோடு; புதர்மண்டிய பொது கழிப்பறைகள்: சிரமத்தில் செட்டிநாயக்கன்பட்டி மக்கள்
திண்டுக்கல்:தெருவிளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்த ரோடு, புதர்மண்டிய கழிப்பறைகள், சிதிலமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி, பராமரிக்கப்படாமல் சேதமடைந்த நாடக மேடை மற்றும் ரோடுகள் என செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியின் காந்திநகர், காலனி பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.
இவ்வூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. செட்டிநாயக்கன்பட்டி, அதன் மேற்கு தெரு, ஈ.பி., காலனி, காந்தி நகர், காந்தி நகர் காலனி, இம்மானுவேல்சேகரன் நகர், சுந்தரலிங்கம் நகர், திருநகர், பழனியப்பா நகர், பத்மாநகர், தாய்முகாம்பிகை நகர், வேதாத்திரி நகர், ரமணமஹரிஷி நகர், அலக்குவார்பட்டி, ராஜக்காபட்டி, முடக்கு ராஜக்காபட்டி, கள்ளிபட்டி, சத்யா நகர், ராஜ்நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குடிநீர் பற்றாக்குறை, சேதமடைந்த ரோடு, போதிய குடிநீர் மேல்நிலை தொட்டிகள் இல்லாதது, கழிப்பறை இன்றி பொது வெளியை பயன்படுத்தும் நிலை என பல்வேறு அடிப்படை தேவைகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.


