Lifestyle and human interest
இருள் சூழ்ந்த ரோடு; புதர்மண்டிய பொது கழிப்பறை சிரமத்தில் செட்டிநாயக்கன்பட்டி மக்கள்

திண்டுக்கல்: மின்விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்த ரோடு, புதர்மண்டிய கழிப்பறைகள், சிதிலமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி, பராமரிக்கப்படாமல் சேதமடைந்த நாடக மேடை மற்றும் ரோடுகள் என செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி காந்திநகர், காலனி பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.
இவ்வூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. செட்டிநாயக்கன்பட்டி, அதன் மேற்கு தெரு, ஈ.பி., காலனி, காந்தி நகர், காந்தி நகர் காலனி, இம்மானுவேல் சேகரன் நகர், சுந்தரலிங்கம் நகர், திருநகர், பழனியப்பா நகர், பத்மாநகர், தாய்முகாம்பிகை நகர், வேதாத்திரி நகர், ரமணமஹரிஷி நகர், அலக்குவார்பட்டி, ராஜக்காபட்டி, முடக்கு ராஜக்காபட்டி, கள்ளிபட்டி, சத்யா நகர், ராஜ்நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குடிநீர் பற்றாக்குறை, சேதமடைந்த ரோடு, போதிய குடிநீர் மேல்நிலை தொட்டிகள் இல்லாதது, கழிப்பறை இன்றி பொது வெளியை பயன்படுத்தும் நிலை என பல்வேறு அடிப்படை தேவைகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படு கின்றனர்.
இல்லை தெருவிளக்கு அச்சத்தில் பெண்கள் ரவிச்சந்திரன், காந்தி நகர் காலனி: செட்டிநாயக்கன்பட்டியில் இருந்து காந்திநகர் செல்லும் ரோட்டில் ஒரு இடத்தில் கூட மின்கம்பங்கள் இல்லை. இதனால் அவ்வழியாக நடந்து செல்லவே பெண்கள் அச்சப்படுகின்றனர். இப்பகுதியில் தெருவிளக்குகளுடன் கூடிய மின்கம்பங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காந்திநகரில் சுய உதவி பெண்கள் பராமரிக்க அனுமதி வழங்கி திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி திறந்து வைத்த பொது கழிப்பறை பயன்பாடு இன்றி உள்ளது. அதேபோல் காந்திநகர் காலனி முகப்பில் கட்டப்பட்ட கழிப்பறை பயன்பாடு இன்றி புதர்செடிகள் வளர்ந்து பரவியுள்ளன. இதனை புனரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
மேல்நிலை தொட்டிகளை அகற்ற நடவடிக்கை சண்முகவேல், காந்திநகர் காலனி மைதானம் எதிர்புறம்: காந்திநகர் காலனியில் நாடகமேடை சேதமடைந்து பராமரிப்பு இன்றி உள்ளது. அதன் அருகில் குடிநீர் மேல்நிலை தொட்டியின் அடிப்பகுதியில் கான்கிரீட் சிலாப்புகள் கீழே விழுந்து சேதமடைந்துள்ளன. மழைக்காலத்தில் மேலும் சேதமடைந்து விபத்து ஏற்படுவதற்கு முன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பராமரிப்பு பணிகளை முன்னெடுக்க வேண்டும்.மேல்நிலை தொட்டிக்கு அருகில் உள்ள பழமையான குடிநீர் தொட்டியை அகற்ற பொதுப்பணித்துறை கட்டடப் பொறியாளர்கள் பலமுறை பார்வையிட்டு சென்றும் இன்னும் பணிகள் துவங்க வில்லை. அதனை இடித்து அகற்ற வேண்டும். குடிநீர் குறைந்தபட்சம் 2 நாட்களுக்கு ஒருமுறை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.