''நிலாவுக்கு நான் தான் ஓனர்?'-விண்வெளிப் பக்கமும் திரும்பிய ட்ரம்பின் ஆதிக்கம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிலாவை உரிமை கொண்டாடிய விசித்திரமான பதிவு உலக அளவில் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது. தனது அதிரடியான மற்றும் விசித்திரமான கருத்துக்களால் உலக நாடுகளின் கவனத்தைத் தன் பக்கம் திருப்புவதில் வல்லவரான டிரம்ப், முன்னதாக ஒண்டாரியோ ஏரியை அமெரிக்க ஏரி என்றும், ஹோர்முஸ் ஜலசந்தியை ட்ரம்பின் ஜலசந்தி என்றும் மாற்ற வேண்டும் எனப் பேசியிருந்தார்.
ஆனால் தற்போது பூமியையும் தாண்டி விண்வெளிப் பக்கமும் தனது பார்வையைத் திருப்பியுள்ளார். அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சொந்த சமூக ஊடக தளமான 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் நிலாவின் பிரம்மாண்டமான புகைப்படம் ஒன்றை அதிரடியாகப் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தின் மேல், மிகத் தெளிவாக "நிலா நம்முடையது" என்று எழுதி, அதன் அருகில் அமெரிக்காவின் தேசியக் கொடியையும் பதிவிட்டுள்ளார். விண்வெளியில் உள்ள ஒரு இயற்கை துணைக்கோளை, அமெரிக்காவுக்கு மட்டுமே சொந்தமானது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரடியாக உரிமை கொண்டாடியிருப்பது விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலா உரிமைப் பதிவிற்குச் சற்று முன்பாக, வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வப் பக்கங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. அதில் அவர் பிரபல காமிக்ஸ் சூப்பர் ஹீரோவான 'கிரீன் லேண்டர்' உடையில் காட்சியளிக்கிறார். அதோடு, அமெரிக்காவின் விண்வெளிப் படைக்காக ஏஐ மூலம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அதிநவீனக் கருப்பு மற்றும் சாடின் பிளாக் நிறச் சீருடைகளையும் அவர் உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார் . சர்வதேச விண்வெளிச் சட்டங்களின்படி எந்தவொரு நாடும் நிலவை உரிமை கொண்டாட முடியாது என்றாலும், ட்ரம்பின் இந்த 'நிலா நமக்குத்தான்' என்ற அதிரடிப் பதிவு தற்போது இணையத்தில் மீம்ஸ் மற்றும் கிண்டலான கமெண்ட்டுகளுடன் பயங்கரமாக டிரெண்டாகி வருகிறது.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
