''நிலாவுக்கு நான் தான் ஓனர்?'-விண்வெளிப் பக்கமும் திரும்பிய ட்ரம்பின் ஆதிக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிலாவை உரிமை கொண்டாடிய விசித்திரமான பதிவு உலக அளவில் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது. தனது அதிரடியான மற்றும் விசித்திரமான கருத்துக்களால் உலக நாடுகளின் கவனத்தைத் தன் பக்கம் திருப்புவதில் வல்லவரான டிரம்ப், முன்னதாக ஒண்டாரியோ ஏரியை அமெரிக்க ஏரி என்றும், ஹோர்முஸ் ஜலசந்தியை ட்ரம்பின் ஜலசந்தி என்றும் மாற்ற வேண்டும் எனப் பேசியிருந்தார்.
ஆனால் தற்போது பூமியையும் தாண்டி விண்வெளிப் பக்கமும் தனது பார்வையைத் திருப்பியுள்ளார். அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சொந்த சமூக ஊடக தளமான 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் நிலாவின் பிரம்மாண்டமான புகைப்படம் ஒன்றை அதிரடியாகப் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தின் மேல், மிகத் தெளிவாக "நிலா நம்முடையது" என்று எழுதி, அதன் அருகில் அமெரிக்காவின் தேசியக் கொடியையும் பதிவிட்டுள்ளார். விண்வெளியில் உள்ள ஒரு இயற்கை துணைக்கோளை, அமெரிக்காவுக்கு மட்டுமே சொந்தமானது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரடியாக உரிமை கொண்டாடியிருப்பது விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலா உரிமைப் பதிவிற்குச் சற்று முன்பாக, வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வப் பக்கங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. அதில் அவர் பிரபல காமிக்ஸ் சூப்பர் ஹீரோவான 'கிரீன் லேண்டர்' உடையில் காட்சியளிக்கிறார். அதோடு, அமெரிக்காவின் விண்வெளிப் படைக்காக ஏஐ மூலம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அதிநவீனக் கருப்பு மற்றும் சாடின் பிளாக் நிறச் சீருடைகளையும் அவர் உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார் . சர்வதேச விண்வெளிச் சட்டங்களின்படி எந்தவொரு நாடும் நிலவை உரிமை கொண்டாட முடியாது என்றாலும், ட்ரம்பின் இந்த 'நிலா நமக்குத்தான்' என்ற அதிரடிப் பதிவு தற்போது இணையத்தில் மீம்ஸ் மற்றும் கிண்டலான கமெண்ட்டுகளுடன் பயங்கரமாக டிரெண்டாகி வருகிறது.
இந்தச் செய்தி உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதற்குப் பின்னால் ஒரு மிக முக்கியமான விண்வெளிச் சட்டப் பின்னணி ஒளிந்துள்ளது. சர்வதேச விண்வெளிச் சட்டங்களின்படி எந்தவொரு நாடும் நிலவையோ அல்லது விண்வெளிப் பொருட்களையோ தங்களுக்குச் சொந்தமானது என்று உரிமை கொண்டாட சட்டப்பூர்வமாக வழியே இல்லை. கடந்த 1967-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டு வரப்பட்ட சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தின்படி நிலா மற்றும் விண்வெளியில் உள்ள பிற இயற்கை கோள்கள் அனைத்தும் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் பொதுவான சொத்தாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் எந்தவொரு தனிப்பட்ட நாடும் தனது தேசியக் கொடியை நட்டு வைத்து, அந்தப் பிராந்தியம் தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று அரசாங்கம் மூலமாகப் பிரகடனம் செய்ய முடியாது. இருப்பினும், டொனால்ட் டிரம்ப் தனது முந்தைய ஆட்சி காலத்திலேயே அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையின் கீழ் 'யுஎஸ் ஸ்பேஸ் ஃபோர்ஸ்' எனப்படும் தனித்துவமான விண்வெளிப் படையை உருவாக்கி ஆச்சரியப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மீண்டும் வெள்ளை மாளிகையில் அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டிரம்ப், விண்வெளித் துறையில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த பல்வேறு அதிரடித் திட்டங்களை வகுத்து வருகிறார். குறிப்பாக நாசா அமைப்புடன் இணைந்து 'ஆர்ட்டெமிஸ்' விண்வெளித் திட்டத்தின் மூலம் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சிகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில், நிலாவுக்குத் தனியுரிமை கொண்டாடுவது போல் ட்ரம்ப் வெளியிட்ட இந்த சமூக ஊடகப் பதிவு, வெறும் விளம்பர நோக்கத்திற்காகச் செய்யப்பட்ட ஒன்றா அல்லது எதிர்காலத்தில் விண்வெளிப் பிராந்தியங்களைக் கைப்பற்றுவதற்கான அமெரிக்காவின் மறைமுக வியூகமா என்ற விவாதம் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் பூமியின் எல்லைப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தி வரும் வேளையில், டிரம்ப் பூமியைத் தாண்டி ஒட்டுமொத்த நிலவிற்கே அமெரிக்கா தான் ஓனர் என்பது போலப் பதிவிட்டிருப்பது, சர்வதேச அரங்கில் அவரது வழக்கமான அரசியல் பாணியையே மீண்டும் பிரதிபலிக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)