செங்கல்பட்டு சதுரங்கப்பட்டினம் கோட்டையை மீண்டும் அகழாய்வு செய்ய தொல்லியல் துறை முடிவு
சென்னை:மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் கோட்டை, மீண்டும் அகழாய்வு செய்யப்பட உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் இருந்து, 22 கி.மீ., தொலைவில் உள்ளது சதுரங்கப்பட்டினம் எனும் துறைமுக நகரம். இந்த பகுதியை நெதர்லாந்து நாட்டிலிருந்து, நம் நாட்டிற்கு வணிகம் செய்ய வந்த டச்சுக்காரர்கள், 17ம் நுாற்றாண்டில், இப்பகுதியை தங்களின் வணிகத்தளமாகவும், ராணுவ நடவடிக்கைகளுக்கான தளமாகவும் மாற்றினர்.
தங்களின் வணிக பயன்பாடு மற்றும் பாதுகாப்புக்காக, ராட்சத தானியக்கிடங்கு, யானைகளின் கட்டுத்தறிக்கான தம்பம், குதிரை லாயம், பண்டகசாலை, வெடிமருந்து சேமிக்கும் ரகசிய சுரங்கப்பாதைகள், சிறைச்சாலைகள் உள்ளிட்டவற்றுடன், 10 ஏக்கர் பரப்பளவில் பாதுகாப்பான கோட்டையையும், அதைச் சுற்றி மதிலுடன் கூடிய சுற்றுச்சுவரையும் கட்டினர்.




