ஓய்வு ஆசிரியரிடம் ரூ.58.50 லட்சம் மோசடி: கேரள வாலிபர்கள் மூவர் கைது
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் அன்புநாதனிடம் 67, அமலாக்கத்துறை அதிகாரிகள் போல் பேசி ரூ.58.50 லட்சம் மோசடி செய்த கேரள வாலிபர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர்.
பெரியகுளம், தென்கரையை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் அன்புநாதன். இவரிடம் அலைபேசியில் விக்ரம் குமார் என்ற பெயரில் அறிமுகமான நபர், தன்னை அமலாக்கத்துறை அதிகாரி போல் காட்டிக்கொண்டார். டி.பி.எஸ்., வங்கி, ஜெட் ஏர்வேஸ் உரிமையாளர்களுடன் சேர்ந்து அன்புநாதன் ரூ.13 லட்சம் மோசடி செய்ததாக கூறினார். தொடர்ந்து ரவிக்குமார், ஜார்ஜ் மேத்யூ என்ற பெயரில் அறிமுகமான இருவர், கைதில் இருந்து தப்பிக்க உதவுவதாக அன்புநாதனிடம் தெரிவித்தனர்.
இதற்காக அவரிடம் இருந்து பல தவணைகளாக ரூ.58.50 லட்சத்தை வசூலித்தனர். வீடு, நகை உள்ளிட்ட சொத்துக்களை அடகு வைத்து அன்புநாதன் இந்த பணத்தை வழங்கினார். இதற்கிடையே தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், தேனி சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார்.


