ரூ.59 லட்சம் மோசடி மேலும் 3 பேர் கைது

தேனி: ஓய்வுபெற்ற ஆசிரியர் அன்புநாதன், 67, என்பவரிடம், 59 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், மேலும் மூன்று வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம், தென்கரையைச் சேர்ந்தவர், ஓய்வுபெற்ற ஆசிரியர் அன்புநாதன். இவரிடம், மொபைல்போனில் விக்ரம்குமார் என்ற நபர் அமலாக்கத்துறை அதிகாரி என அறிமுகமானார்.
இந்நிலையில், அன்புநாதனின் ஆதார் அட்டை மூலம், 13 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது. உங்களை கைது செய்கிறோம் எனக்கூறி மிரட்டி உள்ளார்.
தொடர்ந்து, ரவி குமார், ஜார்ஜ் மேத்யூ ஆகிய பெயர்களில் அறிமுகமான இருவர், கைதில் இருந்து தப்பிக்க உதவுவதாக அன்புநாதனிடம் தெரிவித்தனர். இதற்காக அவர்கள், பல தவணைகளாக, 59 லட்சம் ரூபாய் வசூலித்தனர்.
அன்புநாதன் புகாரில், தேனி சைபர் கிரைம் போலீசார், திருப்பத்துார் மாவட்டத்தைச் சேர்ந்த இளையராஜா, 22, என்பவரை, கடந்த ஆகஸ்டில் கைது செய்தனர்.
தற்போது, கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த சாதுலி, 28, சல்மானுல் பரீஸ், 23, அஸ்வின்ராஜ், 29, ஆகியோரை கைது செய்துள்ளனர்.