நான்கு வழிச்சாலையாகும் பல்லடம் -– பொள்ளாச்சி ரோடு
பல்லடம்: பல்லடம் – - பொள்ளாச்சி ரோட்டை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி துவங்கி நடந்து வருகிறது.
பல்லடம் - – பொள்ளாச்சி வழியில், கன்டெய்னர்கள், சரக்கு வாகனங்கள், கறிக்கோழி வேன்கள் அதிகளவில் சென்று வருகின்றன. பொள்ளாச்சி வழியாக கேரளாவை இணைக்கும் இந்த சாலை, சரக்கு போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக உள்ளது. இதனால், பொள்ளாச்சி -– சுல்தான்பேட்டை வரையிலான சாலை கடந்த ஆண்டு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது பல்லடத்தை அடுத்த வெங்கிட்டாபுரம் முதல் காமநாயக்கன்பாளையம் வரை 7 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை விரிவாக்கப் பணி தொடங்கியுள்ளது.
நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஏற்கனவே 10 மீட்டர் அகலம் உள்ள சாலை, 16 மீட்டர் அகலத்துக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்காக கூடுதலாக நிலம் கையகப்படுத்தப்படவில்லை. தேவையான இடங்களில் தரைமட்ட பாலங்கள், வேகத்தடுப்புகள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. பணிகள் சில மாதங்களில் நிறைவடைந்து சாலை பயன்பாட்டுக்கு வரும்,’ என்றனர்.


