கொச்சி இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா?

பல்லடம்: பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ள பல்லடம்- கொச்சி இணைப்புச் சாலை, நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருப்பூர் மற்றும் கோவை தொழில் நகரங்களை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது பல்லடம். கோவை வழியாக கேரள மாநிலத்தை இணைப்பதால், தினமும் ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள், கன்டெய்னர்கள் இவ்வழியாக செல்கின்றன.
தேசிய நெடுஞ்சாலைதான் இதற்கு பிரதான சாலை. இதனைப்போல, பல்லடம் - செட்டிபாளையம் வழியாக கோவையை இணைக்கும் கொச்சின் இணைப்புச் சாலையும், கோவைக்கு மாற்று வழியாக உள்ளது.
இவ்வாறு, முக்கியத்துவம் வாய்ந்த இந்த நெடுஞ்சாலை, பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாபல் உள்ளது. குறிப்பாக, கரடிவாவி -- செட்டிபாளையம் வரையிலான நெடுஞ்சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. எண்ணற்ற அபாய வளைவுகள், வேகத்தடைகள் உள்ளதால், இதில் மிக கவனத்துடன்தான் பயணிக்க வேண்டி உள்ளது.
கோவையை இணைக்கும் மாற்று வழித்தடமான இச்சாலையை, வாகன ஓட்டிகளும் அதிகளவு பயன்படுத்துகின்றனர்.
ஆனால், பராமரிக்கப்படாமல், மிகவும் மோசமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுவதுடன், விபத்து அபாயத்தையும் சந்தித்து வருகின்றனர். இச்சாலையை பயன்படுத்துவதற்கு ஏற்ப ஒழுங்குபடுத்தி, சீரமைத்தால், பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.
இது குறித்து, திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் வேலுசாமி கூறுகையில், ''பல்லடம் - கொச்சின் சாலை, கோவை செல்வதற்கு மிகவும் எளிமையான வழித்தடமாகும்.
இச்சாலையை பராமரித்து, புதுப்பித்தால், பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக இருக்கும். தொழில் துறையினருக்கு இது மிகவும் பயனளிப்பதாகவும் இருக்கும்.இதை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த வேண்டும்,'' என்றார்.