புதுமையும் போராட்டமும் நிறைந்ததே டி.வி.ஆரின் வாழ்க்கை பயணம்; பவள விழாவில் வீடியோ வெளியீடு
நமது நிருபர்சென்னையில் நடந்த பவள விழா நிகழ்ச்சியில், தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் வாழ்க்கை
சென்னையில் நடந்த பவள விழா நிகழ்ச்சியில், 'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் வாழ்க்கை பயணம் குறித்த சிறப்பு காணொளி ஒளிபரப்பப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது: ஒரு சாதாரண பத்திரிகையாளராய், ஒரு மாநிலத்தின் வரைபடத்தையே மாற்ற முடியுமா? ஒரு சமஸ்தான அரசையே பகைத்துக் கொண்டு, நாதளிதழ் நடத்த முடியுமா? பொருளாதார இழப்புகளை பொருட்படுத்தாமல், இதழியல் துறையில் அடுத்தடுத்து புதுமைகளை புகுத்த முடியுமா? முடியும் என்றுதான் கூறுகிறது டி.வி.ராமசுப்பையரின் வாழ்க்கை வரலாறு.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த, தழுவிய மகாதேவர் கோவில் பகுதியில், 1908ம் ஆண்டு, அக்டோபர் 2ம் தேதி பிறந்தார் டி.வி.ராமசுப்பையர். ராமலிங்க அய்யர், பகவதி அம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்த இவர், அவரது ஏழு வயதில், வேங்கடபதி அய்யர் - ஆவுடையம்மாள் தம்பதியினருக்கு தத்துக் கொடுக்கப்பட்டார். இளமையிலேயே, காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட டி.வி.ஆர்., தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்துக்காக, பல்வேறு பணிகளில் ஈடுபட தொடங்கினார். ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டார். 1946ம் ஆண்டு, திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், கட்டாய மற்றும் இலவச ஆரம்பக் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது.


