தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் 6.9.1951 அன்றைய தலையங்கம்
ம க்கள் இன்னல்கள் நீங்கி, இன்ப நிலை அடைவதற்கு எமது சக்திக்கு இயன்ற அளவு தொண்டாற்றும் ஒரே நோக்கத்துடன், 'தினமலர்' பத்திரிகையைத் தொடங்கியிருக்கிறோம்.
மக்கள் முன்னேற்றத்திற்காக உழைப்போம் என்ற சபதத்தை மனதில் நிறுத்தி, இப்புது முயற்சியில் இறங்கியிருக்கிறோம். 'தினமலர்' பத்திரிகையை எந்த அரசியல் கட்சியுடனும் சார்பு கொள்ளாத வகையில் சுயேச்சையாக நடத்த முற்படுவதால், எந்த அரசியல் கட்சிக்கும், 'தினமலர்' விரோதி என்று அர்த்தமாகாது. எல்லா கட்சியினரும் தத்தம் அபிப்பிராயங்களை கண்ணியமான முறையில் தெரிவிக்க, 'தினமலர்' இதழில் எப்போதும் இடமுண்டு. ஜன சமூகத்திற்குத் தீங்கு இழைப்போர் யாராக இருந்தாலும் சரி... அவர்களை வன்மையாகக் கண்டிப்பதில், 'தினமலர்' சற்றும் தயங்காது.
வகுப்புவாதிகள், மதவெறியர்கள் , பிற்போக்கு கும்பல்கள், குழப்பங்கள் உண்டுபண்ணுபவர்கள், நாட்டைக் காட்டிக் கொடுக்கும் நய வஞ்சகர்கள், தமிழினத்திற்கு துரோகம் செய்யும் கோடாலிக் காம்புகள், இத்யாதி கோஷ்டிகள் அத்தனை பேரும் எமது விரோதிகள்!