5 தங்கப்பதக்கங்கள் வென்ற தேசிய மல்யுத்த வீராங்கனை; 3 குழந்தைகளுடன் 100 அடி பள்ளத்தில் குதிப்பு!
மகாராஷ்டிராவில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்ட மல்யுத்த வீராங்கனை ஒருவர், தனது 3 குழந்தைகளுடன் 100 அடி பள்ளத்தில் குதித்துள்ளார். இதில் ஒரு குழந்தை மட்டும் உயிர் தப்பியது.
மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நல்துர்க் கோட்டையில் இருந்து 100 அடி பள்ளத்தாக்கில் குதித்து தேசிய அளவிலான பெண் மல்யுத்த வீராங்கனை தனது மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார். அதில் அதிர்ஷ்டவசமாக ஒரு குழந்தை மட்டும் உயிர் தப்பியது. அவர்களை மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். கோட்டை மலையில் இருந்து குதித்த மல்யுத்த வீராங்கனையின் பெயர் அஸ்வினி மனோகர் பால் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் பள்ளத்தாக்கில் குதித்ததில் அஸ்வினியும், அவரது ஐந்தரை வயது மகன் அஜிங்க்யாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அவரது இரண்டரை வயது இரட்டை மகள்களில் ஒருவரான கிராந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மற்றொரு மகள் வீரா படுகாயமடைந்து தற்போது தாராசிவ் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருகிறது.



