வெங்காய எக்ஸ்பிரஸ்... வெங்காய விலையைக் குறைக்க மத்திய அரசின் முயற்சி!
சிறப்பு ரயில் போக்குவரத்து மட்டு மன்றி, அரசு தன்னிடம் உள்ள அவசரக் காலக் கையிருப்பு வெங்காயத்தையும் சந்தைக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது
இந்திய ரயில்வே துறையால் இயக்கப்படும் மும்பை எக்ஸ்பிரஸ், மைசூர் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ், செங்கோட்டை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இன்னும் பல்வேறு ரயில்கள் குறித்து நாம் அறிந்திருக்கிறோம். இந்த நிலையில் தற்போது இந்திய ரயில்வே துறை, ‘வெங்காய எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் புதிய ரயில்களை இயக்கத் தொடங்கியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக வெங்காய விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்தச் சூழலில், அதன் விலையைக் கட்டுப் படுத்தும் வகையில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து டெல்லி, சென்னை, கொச்சி, குவாஹாட்டி போன்ற முக்கிய நகரங்களுக்கு வெங்காயத்தை விரைவாக எடுத்துச் செல்ல ‘கந்தா எக்ஸ்பிரஸ்’ என்ற சிறப்பு ரயில்களை மத்திய அரசு இயக்கத் தொடங்கியுள்ளது. மராத்தி மொழியில் ‘கந்தா’ என்றால் ‘வெங்காயம்’ என்று பொருள்.
அரசு அறிக்கையின்படி... சில்லறை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயத்தின் சராசரி விலை 50 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 45 சதவிகிதமும், கடந்த மாதத்தைவிட 19 சதவிகிதமும் அதிகம். உற்பத்தி குறைவு மற்றும் வெங்காய வரத்து குறைந்ததே விலை உயர்வுக்கு முக்கியக் காரணம். தற்போதைய நிலவரப்படி, டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 65 ரூபாய் வரையிலும், சென்னையில் 58 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.



