தங்க கொழுக்கட்டை கிலோ ரூ.27,000க்கு விற்பனை
நாசிக் : விநாயகர் சதுர்த்தியையொட்டி, மஹாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள இனிப்புக் கடையில், தங்க முலாம் பூசப்பட்ட இனிப்பு கொழுக்கட்டை விற்பனைக்கு வைக்கப்பட்டது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த கொழுக்கட்டை, ஒரு கிலோ 27 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள 'சாகர் ஸ்வீட்ஸ்' என்ற இனிப்பு கடையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்த ஆண்டும் தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2021 முதல் ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்தி அன்று விற்பனை செய்யப்படும் இந்த கொழுக்கட்டையை நிறைய வாடிக்கையாளர்கள் பார்த்து செல்கின்றனர்.
கடந்த 2021ல் தங்கமுலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை அறிமுகம் செய்யப்பட்டபோது, கிலோ 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.தற்போது தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து இருப்பதால், இந்த ஆண்டு கிலோ 27 ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டது. அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும் இதன் தரம் மற்றும் தனித்துவமான தோற்றம் காரணமாக இதை ஆர்வமுடன் வாங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.முந்திரி, பாதாம், பிஸ்தா, பாலாடை கட்டி, குங்குமப்பூ, ஏலக்காய் துாள், நெய் உள்ளிட்ட பொருட்கள் சேர்த்து தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வகை கொழுக்கட்டையில், 24 காரட் துாய்மையான தரம் கொண்ட சாப்பிடக்கூடிய தங்க முலாம் பயன்படுத்தப்படுகிறது. இதைச் சாப்பிடுவதால் மனித உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

