Lifestyle and human interest
ஒரு கிலோ கொழுக்கட்டை ரூ.27,000?; அப்படி என்ன இருக்கிறது அதில்?

விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை என்பது பிரதானம். அதனால், விநாயகர் சதுர்த்தியின் போது மக்கள் விதவிதமான கொழுக்கட்டைகளைச் சமைத்து விநாயகருக்குப் படையல் வைப்பது வழக்கம். அதே போன்று, அந்த விதவிதமான கொழுக்கட்டைகளை தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் வழங்குவது வழக்கம்.
அதே போல, இந்த காலகட்டத்தில் கடைகளிலும் கொழுக்கட்டை விற்பனை அமோகமாக இருக்கும். அதனால், கடைகளில் ஏராளமான வகைகளில் கொழுக்கட்டைகள் விற்பனை செய்யப்படும். அந்த வகையில், மராட்டிய மாநிலத்தில் நாசிக்கில் உள்ள பிரபல இனிப்பு கடை ஒன்றில், ஒருவகை கொழுக்கட்டை விற்பனை செய்யப்பட்டது. அதன் விலை என்பது ஒரு கிலோ பல ஆயிரங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
அதாவது, நாசிக்கில் உள்ள ’சாகர் ஸ்வீட்ஸ்’ என்ற இனிப்புக் கடையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு உண்ணக்கூடிய தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை விற்பனை செய்யப்பட்டது. இந்த தங்கக் கொழுக்கட்டை (கோல்டன் மோதக்) ஒரு கிலோ ரூ.27,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்த இனிப்பு கடை, கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தங்க முலாம் பூசப்பட்ட இனிப்புகளைத் தயாரித்து வருகிறது. 2021 ல் அவர்கள் தொடங்கியபோது, ஒரு கிலோவின் விலை ரூ. 12,000 ஆக இருந்தது. தங்கத்தின் விலை உயர்ந்ததால், இந்த ஆண்டு அதன் விலை ரூ.27,000 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, ”தங்கம் உண்பதற்குப் ஆபத்தில்லை என்றாலும், அது உடலுக்குக் எந்தவித வைட்டமின்களையோ அல்லது ஊட்டச்சத்தையோ தருவதில்லை” என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)