“சாப்டியானு கேட்க யாரும் இல்ல... அதனால இந்த உலகத்தையே சொந்தமாக்கிக்கிட்டேன்!”
21 வயசுக்கு மேல, அம்மா என்னோட கல்யாணம் பத்தி பேச ஆரம்பிச்சாங்க. ஆனா, எனக்குக் கல்யாணத்துல விருப்பம் இல்லனு சொல்லிட்டேன். அம்மாவும் அதுக்கப்புறம் என்னை வற்புறுத்தல.
“எனக்குனு ஒரு குடும்பம் இல்லங்க. ஆனா, நான் தனியா இருக்கிறேன்னு ஒரு நாளும் நினைச்சதில்ல. யாருக்கு உதவி தேவைப்படுதோ, அவங்க இருக்கிற இடம்தான் எனக்கு வீடு. அவங்கதான் என் குடும்பம். அதனாலதான், எவ்வளவு தூரமா இருந்தாலும், ஒரு சமூகப் பணி நடக்குதுனா என்னால முடிஞ்ச உதவியைச் செய்ய அங்கே போயிடுவேன். எனக்கு வேற என்னங்க வேணும்... நம்மால ஒருத்தருடைய வாழ்க்கையில ஒரு சின்ன நல்லது நடந்தாலே, அதுதான் எனக்கு சந்தோஷம்!” - நிதானமாகப் பேசுகிறார் லோகநாதன்.
ஈரோடு மாவட்டம், கதிரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். சமையல் வேலை செய்து வந்த தாயைக் கவனித்துக் கொள்ள, கிடைத்த வேலைகளையெல்லாம் செய்து வந்திருக்கிறார். 49 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாத லோகநாதன், கடந்த 12 ஆண்டுகளாகத் தன் வாழ்க்கையை சமூகப் பணிகளுக்காக அர்ப்பணித்திருக்கிறார். சுற்றுச்சூழல் தூய்மை, மரக்கன்றுகள் நடுதல், சமூகப் பணிகள் என நல்ல செயல்கள் நடைபெறும் இடமெல்லாம் தன்னால் முடிந்த உதவியைச் செய்து வருகிறார். பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து, மக்களுக்குப் பயனளிக்கும் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார். தன் வாழ்க்கை, சமூகப்பணி, பயணங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார் லோகநாதன்.
“சின்ன வயசுல இருந்தே வறுமையில வளர்ந்த ஆளு நான். அப்பா தவறுனதுக்குப் பிறகு பள்ளிக்கூடம் போகல. அம்மா சமையல் வேலைக்குப் போவாங்க. அதனால நானும் அம்மாகூட வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். பிறகு விவசாயக் கூலி வேலைக்குப் போனேன். கிடைச்ச வேலையைச் செய்ய ஆரம்பிச்சேன். எங்க அம்மா சமையல் பண்ணின வீட்லயே எங்களுக்கு தங்க இடம் கொடுத்திருந்தாங்க.

