25 நாட்களாக சிக்காத ஆட்கொல்லி புலி.. 245 இடங்களில் கேமராக்கள் வைத்து வனத்துறை கண்காணிப்பு..!
கூடலூரில் இரண்டு பேரை தாக்கி கொன்ற புலியை பிடிக்க முதுமலையில் மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கிகளுடன் வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர். 25 ஆவது நாளாக ஆட்டம் காட்டும் புலியை பிடிக்க 245 கண்காணிப்பு கேமிரா மற்றும் 13 இடங்களில் கூண்டுகள் வைத்தும் இதுவரை சிக்காத புலி ஆட்டம் காட்டி வருகிறது.
கூடலூர் அருகே ஓவேலி லாரிஸ்டன் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டு பேரை தாக்கிக் கொன்ற புலியை பிடிக்க வனத்துறையினர் இன்றுடன் 25 நாட்களாக தீவிர தேடலில் ஈடுபட்டுள்ளனர். 195 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த நிலையில் புலி நடமாட்டம் மற்றும் கால்தடம் தென்பட்ட பகுதியில் கூடுலாக 50 கண்காணிப்பு கேமரா என 245 இடங்களில் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் 13 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. மூன்று ட்ரோன் கேமரா குழுக்களுடன் இரவு பகலாக புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வரும் நிலையில் புலி கூண்டில் சிக்காமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது.


