Politics
புலியை தேடும் பணி: கும்கி யானைகள் மாற்றம் முதுமலை, மசினகுடி பகுதிகளிலும் தேடுதல் பணி தீவிரம்

கூடலுார்: கூடலுாரில், இரண்டு பேரை தாக்கி கொன்ற புலியை பிடிக்கும் பணி, தொடரும் நிலையில், இப்பணியில் ஈடுபட்ட கும்கி யானைகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, முதுமலையில் வேறு கும்கிகள் வரவழைக்கப்பட்டன.
கூடலுார் ஓவேலி லாரஸ்டன் பகுதியில், கடந்த மாதம் புலி தாக்கி இருவர் உயிரிழந்தனர். ஆட்கொல்லி புலியை, 21ம் தேதி முதல் வனத்துறையினர் தேடி வருகின்றனர். இப்பணியில், முதுமலை யானைகள் முகாம் கும்கி யானைகள் உதயன், பொம்மன் ஆகியவை, கடந்த, 28ம் தேதி முதல் ஈடுபட்டு வருகின்றன. 26வது நாளாக நேற்றும் வனத்துறையினர் புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கும்கி யானைகள் உதயன், பொம்மனை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு நேற்று அழைத்து சென்றனர். இவைகளுக்கு மாற்றாக முகாமிலிருந்து கும்கி யானைகள் சீனிவாசன், கிரி ஆகியவை கூடலுார் பகுதிக்கு கொண்டு வரப்பட்டன.
யானைகள் முகாம் வனச்சரகர் ராமர் கூறுகையில், ‘‘யானைகளுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில், கும்கி யானைகள் சுழற்சி முறையில் மாற்றப்பட்டன,’’ என்றார்.
கூடலுார் வன அலுவலர் தேவராஜ் கூறுகையில்,‘‘புலியை பிடிப்பதற்காக கூடலுார் மட்டுமின்றி முதுமலை, மசினகுடி வனப்பகுதிகளிலும் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்து வருவதுடன், ஊழியர்களும் புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவேலி பகுதியில் வைக்கப்பட்ட ஒரு கூண்டு, சில்வர் கிளவுட் அருகே மாற்றப்பட்டுள்ளது. புலியை பிடிக்கும் வரை பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம்,’’ என்றார்.