வாசகர்கள் வருகையின்றி காற்றாடும் நிலையில் கிராமப்புற நுாலகங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தாத அதிகாரிகள்
திருப்புல்லாணி: மாவட்ட நுாலகத்தின் கட்டுப்பாட்டில் ரெகுநாதபுரம், திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை, கீழக்கரை, சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கிராமப்புற கிளை நுாலகங்கள் வாசகர்கள் வருகையின்றி உள்ள நிலையில் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை.
வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக கிராமப்புற மக்களுக்கு நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் மற்றும் பல்வேறு தலைப்பிலான புத்தகங்களை வழங்கி தினசரி வாசிப்பு பழக்கத்தை வளர்க்கவும், கல்வி மற்றும் போட்டி தேர்வுக்கு வழிகாட்டுதல், பள்ளி, கல்லுாரி மாணவர்களின் படிப்புக்கு தேவையான பாடப் புத்தகங்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் வகையில் இளைஞர்களுக்கு வழிகாட்டுதல் உள்ளிட்டவைகளுக்கு பங்களிக்கின்றன.
வேளாண்மை, சுகாதாரம் அரசு திட்டங்கள், சட்டம், தொழில் நுட்பம் தொடர்பான தகவல்களை கிராம மக்களுக்கு கொண்டு சேர்க்கவும், முதியோர்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை பயனுள்ளதான வழியில் செலவிடவும் இது போன்ற கிராமப்புற நுாலகங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வழி காட்டின. தற்போது பெருவாரியாக நுாலகங்களில் வாசகர்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது.
