பிள்ளையார் சிற்ப கல்வெட்டு :செஞ்சி அருகே கண்டெடுப்பு
செஞ்சி:செஞ்சி அருகே, கி.பி., 13ம் நுாற்றாண்டு காலத்திய பிள்ளையார் சிற்ப கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தைச் சேர்ந்த ஆசிரியர் பாரதிராஜா, செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர் சுதாகர் ஆகியோர், பாக்கம் கிராமத்தில் கள ஆய்வு செய்தனர். அங்கு, பிள்ளையார் சிற்பத்துடன் கூடிய கல்வெட்டை கண்டெடுத்தனர்.
இதுகுறித்து, பாரதிராஜா, சுதாகர் கூறுகையில், ''விழுப்புரம் மாவட்டம், பாக்கம் சிவன் கோவில் அருகில் உள்ள பாறையில், இரண்டரை அடி உயரம், இரண்டு அடி அகலமும், நான்கு கைகளுடன் பிள்ளையார் புடைப்பு சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அதன் இடதுபுறம், வெண்பா வடிவில் கல்வெட்டு உள்ளது. கி.பி., 13ம் நுாற்றாண்டை சேர்ந்த அந்த கல்வெட்டில், மகத நாட்டு மன்னன் வாணகோவரையனின் கொடை சிறப்பு, குறிப்பிடப்பட்டுள்ளது,'' என்றனர்.





