வறட்சியால் கால்நடைகளுக்கு தீவனம் தட்டுப்பாடு: கறவை மாடு வளர்ப்போர் திண்டாட்டம்
தேனி மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட கறவை மாடுகள், நாட்டு மாடுகள், செம்மறி ஆடுகள் வெள்ளாடுகள் வளர்ப்பு முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். நாட்டு மாடுகள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளை அன்றாடம் மேய்ச்சலுக்கு கொண்டு சென்று இரவில் கொட்டத்தில் அடைப்பார்கள். இவைகளுக்கு பெரும்பாலும் தீவனம் கொடுத்து பராமரிப்பது இல்லை.
ஆனால் கறவை மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதில்லை. வீடுகளில் வைத்து பசுந்தீவனம், உலர் தீவனம், அடர் தீவனம் கொடுத்து பராமரிக்கின்றனர். தேனி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் கோடை மழை, தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால் மேய்ச்சல் நிலங்கள் காய்ந்து விட்டன. மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் தீவனத்திற்காக தொலைதூரம் சென்று திரும்புகின்றன.
மேய்ச்சல் நிலங்கள், வயல் வரப்புகளில் கிடைக்கும் இலை தழைகளை சேகரித்து அந்தந்த பகுதியில் கறவை மாடுகளுக்கு கொடுத்து வந்தனர். நெல், சிறுதானியம், பயறு வகைகளில் அறுவடைக்குப் பின் கிடைக்கும் வைக்கோல், தட்டை, செடி, கொடிகளை இருப்பில் வைத்து தீவனமாக சில மாதங்கள் பயன்படுத்தினர். இருப்பில் இருந்த தீவனம் தீர்ந்ததால் தற்போது பணம் கொடுத்தும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

