மழை இன்றி கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு அதிகரிப்பு
போடி: போடி பகுதியில் மழை பெய்யாததால் கால்நடை தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள், விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டி வந்தனர்.
பால் மாடுகளை வளர்ப்பதால் பால் உற்பத்தி, மாட்டு கழிவுகள் விவசாயத்திற்கு உரமாக பயன்படுவதால் கால்நடை வளர்ப்பு லாபகரமாக இருந்தது. சோளம், மக்காச்சோள பயிர்களின் அறுவடைக்கு பின் கிடைக்கும் அதன் தட்டைகள், கழிவுகளை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தி வந்தனர். தோட்டம், வரப்பு மற்றும் வாய்க்கால் பகுதிகளில் கிடைக்கும் பச்சை தீவனங்கள் மூலம் பால் மாடுகளை வளர்த்தனர்.
ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பெய்யாததால் போடி பகுதியில் ஆறு, கண்மாய்கள், தோட்ட கிணறுகள் வறண்டு நிலத்தடி நீர் மட்டம் குறைந்து உள்ளது.
விவசாய நிலங்கள் தரிசாக மாறி வருகின்றன. இதனால் பச்சை தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளன. மானாவாரி பயிராக பயிரிடப்படும் நிலக்கடலை சரியான விளைச்சல் இல்லாமல் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.
போடி அருகே சிலமலை, சில்லமரத்துப்பட்டி, ராசிங்காபுரம், தர்மத்துப்பட்டி, பெருமாள் கவுண்டன்பட்டி பகுதியில் நிலக்கடலை பயிரிடாமல் தக்காளி, துவரை பயிரிட்டு வருகின்றனர். மாட்டுத் தீவனமாக பயன்படும் நிலக் கடலை, சோளம் பயிர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குறைந்த அளவில் கால் நடைகளை வளர்த்து வரும் சிறு விவசாயிகள் மாட்டுத் தீவனத்திற்காக குறைந்தது 3 கி.மீ., தூரம் போடியை சுற்றி உள்ள மலை அடிவார பகுதிகளுக்கு சென்று பச்சை தீவனங்களை அறுவடை செய்து டூவீலரில் கொண்டு வருகின்றனர். இதனால் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டாத நிலை ஏற்பட்டு உள்ளது.