பிரச்னையும் தீர்வும்.... இலவச சேலை உற்பத்தியில் அளவு மாற்றத்தால் வேலை இழப்பு கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு தொழில் நெருக்கடியால் அவதி
ஆண்டிபட்டி, செப். 6- அரசின் இலவச சேலைகள் உற்பத்தி திட்டத்தில் சேலைகளின் தர அளவுகள் மாற்றத்திற்கு ஏற்ப தறிகளை
அரசின் இலவச சேலைகள் உற்பத்தி திட்டத்தில் சேலைகளின் தர அளவுகள் மாற்றத்திற்கு ஏற்ப தறிகளை மாற்றம் செய்ய முடியாததால் மாவட்டத்தில் கைத்தறி கூட்டுறவு சங்க நெசவாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.
மதுரை கைத்தறி சரகத்தில் உள்ள தேனி மாவட்டத்தில் 5 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் மூலம் இந்த ஆண்டு இலவச சேலை உற்பத்தியில் 48 ஆயிரம் சேலைகள் பெடல்ரக தறிகளிலும், 2 ஆயிரம் சேலைகள் கைத்தறிகளிலும் உற்பத்தி செய்வதற்கு திட்ட குறியீடு வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் 40 ம் நம்பர் நூல் வழங்கப்பட்டு உள்ளூர் தொழிலாளர்கள் மூலம் சாயம், பசை ஏற்றப்பட்டு, ராட்டை இயந்திரம் மூலம் பாவு ரோலாக மாற்றம் செய்து சேலை உற்பத்தி செய்தனர். பாலியெஸ்டர் கோன் ஊடை நூலாக வழங்கப்பட்டது. கடந்த 40 ஆண்டுக்கும் மேலாக இப்பகுதி நெசவாளர்கள் இதனை தொடர்ந்தனர். இந்த ஆண்டு, ரகம் மற்றும் தர அளவுகள் மாற்றம் என்ற பெயரில் நெசவாளர்களுக்கு நேரடியாக நூல் வழங்காமல் வெளியூர்களில் இயங்கும் சைசிங் ஆலைகள் மூலம் பாவு உற்பத்தி செய்து வழங்குகின்றனர். சைசிங் ஆலைகளில் உற்பத்தி செய்து அனுப்பப்படும் பாவு ரோலுக்கு ஏற்ப இப்பகுதி தறிகளை மாற்றம் செய்ய வேண்டி உள்ளது. ஏற்கனவே கடந்த மூன்று மாதமாக உற்பத்தி திட்டம் இன்றி வேலை நடைபெறவில்லை. இந்நிலையில் தறி மாற்றம் செய்ய முடியாமல் மீண்டும் வேலை இழப்பை சந்திக்கின்றனர். நெசவாளர்கள் கூறியதாவது;
மீனாட்சி சக்கம்பட்டி: கடந்த 60 ஆண்டாக கைத்தறி தொழில் செய்கிறேன். 30 ஆண்டுக்கும் மேலாக இலவச சேலை உற்பத்தி செய்கிறேன். தொழிலில் இது போன்ற நெருக்கடி இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை. இரண்டு மாதமாக வேலை இல்லை. நூல் எப்போது கிடைக்கும் என்று கூட்டுறவு சங்க அதிகாரிக்கே தெரியவில்லை. எனக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தாலும் யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் வேலை செய்து பிழைத்து வருகிறேன். வாரம் ஐந்து சேலை உற்பத்தி செய்ய முடியும். சேலை ஒன்றுக்கு பிடித்தம் போக ரூ.150 கூலியாக கிடைக்கும். ரகம், தறிகளை மாற்றம் செய்தால் என் போன்ற வயதானவர்கள் எப்படி இந்த வேலையை செய்ய முடியும்.
