போதைப்பொருள் கடத்தலுக்கு ‛செக்: பிரதமர் மோடிக்கு டிரம்ப் பாராட்டு
வாஷிங்டன்: சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல் நடக்கும் நாடுகள் குறித்த புதிய பட்டியலை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார். இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள போதிலும், அபின் சாகுபடியை கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளை டிரம்ப் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சட்டவிரோத அபின் சாகுபடியைத் தடுக்கவும், அதனை விற்பனை செய்பவர்களை முடக்கி, பாதுகாப்பை பலப்படுத்தவும் பிரதமர் மோடியும், இந்திய அரசும் எடுத்து வரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை நான் வரவேற்கிறேன். 'இந்தியா - அமெரிக்க போதைப்பொருள் தடுப்புக் கொள்கை கட்டமைப்பு' வாயிலாக இந்தியாவுடன் இணைந்து தொடர்ந்து செயலாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் தவிர்த்து ஆப்கானிஸ்தான், பஹாமாஸ், பெலிஸ், பொலிவியா, மியான்மர், கொலம்பியா, மெக்சிகோ உள்ளிட்ட மொத்தம் 23 நாடுகள் இடம்பிடித்துள்ளன. அதேசமயம், ஒரு நாடு இந்தப் பட்டியலில் இடம்பிடிப்பதால், அந்நாட்டு அரசு போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்று அர்த்தமல்ல எனவும் அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது.








/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

