ரோடு விரிவாக்க பணிகளில் மின்கம்பங்களை மாற்றியமைக்க டெண்டர் விடாத தி.மு.க. அரசு: விபத்து அபாயம் அதிகரிப்பு
விருதுநகர்: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடந்து வரும் ரோடு விரிவாக்க பணிகளை முந்தைய தி.மு.க., அரசு அவசர கதியில் துவங்கியது. இதனால் விரிவாக்கத்தின் போது ரோடு ஓரமாக இருக்கும் மின்கம்பங்களை மாற்றியமைக்க டெண்டர் விடப்படாமல் உள்ளது. மின்கம்பங்கள் அகற்றப்படாமல் நடந்து வரும் பணிகளால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
தமிழக சட்டசபையில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முந்தைய தி.மு.க., அரசு ஆட்சியின் இறுதி காலமான 2026 ஜன. ல் பல்வேறு ரோடு விரிவாக்க பணிகளை செய்ய ரூ.2000 கோடி அவசரக் கதியில் சட்டசபை அனுமதி பெறாமல் ஒதுக்கியது, என குற்றம் சாட்டியிருந்தார்.
அவர் கூறியதற்கு ஏற்றார் போல், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடந்து வரும் ரோடு விரிவாக்கம் அவசர கதி பணிகள் போல நடந்து வருகின்றன. வழக்கமாக ரோடு விரிவாக்க பணிகள் துவங்கினால் முதலில் ரோட்டின் ஓரங்களில் உள்ள மின்கம்பங்கள் தான் இடமாற்றி வைக்கப்படும். இதற்காக மின்துறை மதிப்பீடு அனுப்பும், அதற்காக டெண்டர் விட்டு நிதி பெற்று, மின்துறைக்கு கட்டணமாக செலுத்தி கம்பங்களை ரோட்டின் விரிவாக்க அகலத்தில் வைப்பர். பின் ரோடு போடப்படும்.

