Politics
ரோடு விரிவாக்க பணிகளில் மின்கம்பங்களை மாற்றியமைக்க டெண்டர் விடாத தி.மு.க. அரசு: விபத்து அபாயம் அதிகரிப்பு
விருதுநகர்: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடந்து வரும் ரோடு விரிவாக்க பணிகளை முந்தைய தி.மு.க., அரசு அவசர கதியில் துவங்கியது. இதனால் விரிவாக்கத்தின் போது ரோடு ஓரமாக இருக்கும் மின்கம்பங்களை மாற்றியமைக்க டெண்டர் விடப்படாமல் உள்ளது. மின்கம்பங்கள் அகற்றப்படாமல் நடந்து வரும் பணிகளால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
தமிழக சட்டசபையில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முந்தைய தி.மு.க., அரசு ஆட்சியின் இறுதி காலமான 2026 ஜன. ல் பல்வேறு ரோடு விரிவாக்க பணிகளை செய்ய ரூ.2000 கோடி அவசரக் கதியில் சட்டசபை அனுமதி பெறாமல் ஒதுக்கியது, என குற்றம் சாட்டியிருந்தார்.
அவர் கூறியதற்கு ஏற்றார் போல், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடந்து வரும் ரோடு விரிவாக்கம் அவசர கதி பணிகள் போல நடந்து வருகின்றன. வழக்கமாக ரோடு விரிவாக்க பணிகள் துவங்கினால் முதலில் ரோட்டின் ஓரங்களில் உள்ள மின்கம்பங்கள் தான் இடமாற்றி வைக்கப்படும். இதற்காக மின்துறை மதிப்பீடு அனுப்பும், அதற்காக டெண்டர் விட்டு நிதி பெற்று, மின்துறைக்கு கட்டணமாக செலுத்தி கம்பங்களை ரோட்டின் விரிவாக்க அகலத்தில் வைப்பர். பின் ரோடு போடப்படும்.
ஆனால் தி.மு.க., ஆட்சி இறுதியில் மதுரை, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் துவங்கி நடந்து வரும் ரோடு விரிவாக்க பணிகளில் மின்கம்பங்கள் மாற்றியமைக்க மின்துறை, நெடுஞ்சாலைத்துறைக்கு மதிப்பீடு அனுப்பியும், நெடுஞ்சாலைத்துறை மாற்றியமைக்க டெண்டர் விடவில்லை. பல மின்கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளதால் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் இரவில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தி வருகின்றன.
முந்தைய அரசின் அவசர கதியால் இந்த அவலம் நேர்ந்துள்ளதாக அதிகாரிகள் புலம்புகின்றனர். எனவே அரசு விரைந்து டெண்டர் கோரி மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணிகளை துவக்க வேண்டும் என மக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.