பெரியார் அருவியில் செந்நிறத்தில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம் - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, அங்குள்ள புகழ்பெற்ற பெரியார் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, அங்குள்ள புகழ்பெற்ற பெரியார் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காடுகளிலிருந்து மண் மற்றும் மரக்கழிவுகள் அடித்து வரப்படுவதால், அருவியில் செந்நிறத்தில் தண்ணீர் சீறிப்பாய்ந்து கொட்டுகிறது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி, சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குவது கல்வராயன்மலை ஆகும். இந்த மலை பகுதியில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று இரவு முதல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மலை பாதைகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
மழை காரணமாக, கல்வராயன்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பெரியார் அருவிக்கு நீர்வரத்து பலமடங்கு அதிகரித்துள்ளது. மலையின் அடர்ந்த காட்டு பகுதிகள் மற்றும் மலை பாதைகளில் இருந்து வெள்ள நீர் பெருக்கெடுத்து வருவதால், மண்ணும் சகதியும் கலந்து அருவி நீர் முற்றிலும் செந்நிறமாக மாறியுள்ளது. பார்ப்போரை கண் இமைக்க வைக்காத அளவுக்கு அசுர வேகத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

