பெரியார் நீர்வீழ்ச்சியில் கொட்டிய தண்ணீர்

கள்ளக்குறிச்சி: பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதியில் சாலையோரம் பெரியார் நீர்வீழ்ச்சி உள்ளது. நேற்று முன்தினம் இரவில் இருந்து கல்வராயன்மலை பகுதியில் பரவலாக மழை பெய்ததால், பெரியார் நீர்வீழ்ச்சிக்கு நீர் வரத் தொடங்கியது. இந்நிலையில், நேற்று மாலை மலை பகுதியில் மழை கொட்டித் தீர்த்ததால் நீர் வரத்து அதிகரித்து, செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டியது.
போதிய மழையில்லாததால் தண்ணீரின்றி நீர்நிலைகள் வறண்ட கிடந்த நிலையில், சில மாதங்களுக்கு பிறகு பெரியார் நீர்வீழ்ச்சியில் அதிகளவு தண்ணீர் கொட்டியது. ஆனால், தண்ணீர் அதிகளவிலும், செம்மண் நிறத்திலும் கொட்டியதால் பொதுமக்கள் நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.