2 லட்சம் தெருநாய்களுக்கு இலக்கு: சென்னை மாநகராட்சியின் தீவிர ரேபிஸ் தடுப்பூசி நடவடிக்கை..!

சென்னையில் தெருநாய்கள் மூலம் ரேபிஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் மாநகராட்சியின் சிறப்பு தடுப்பூசி முகாம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் தெருநாய்கள் மூலம் ரேபிஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் மாநகராட்சியின் சிறப்பு தடுப்பூசி முகாம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 11-ம் தேதி தொடங்கிய இந்தப் பணியில் இதுவரை 60,216 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசியும், உடல் மற்றும் வெளிப்புற ஒட்டுண்ணிகளை அகற்றும் மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன.
நகரம் முழுவதும் உள்ள தெருநாய்களை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வருவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய 4 மண்டலங்களில் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், மாதவரம் மற்றும் அம்பத்தூர் மண்டலங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தெருக்கள் மட்டுமின்றி கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளிலும் நாய்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை தண்டையார்பேட்டையில் 12,684, அம்பத்தூரில் 11,895, திருவொற்றியூரில் 11,795, ராயபுரத்தில் 8,672, மாதவரத்தில் 7,963, மணலியில் 7,207 நாய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.தற்போது மாதவரம் மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் தலா 10 குழுக்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளன.
இதையும் படிங்க: நீலகிரி பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் காக்கும் ஆதிமலை..! இந்தியா முழுவதும் விற்பனையாகும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்..!
ஒவ்வொரு பகுதியாக தெருநாய்களை அடையாளம் கண்டு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதுடன், அக மற்றும் புற ஒட்டுண்ணி நீக்க மருந்துகளும் வழங்கப்படுகின்றன. இந்த இரு மண்டலங்களின் பணிகள் முடிவடைந்ததும், மற்ற பகுதிகளிலும் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சென்னை மாநகராட்சியின் இலக்கு சுமார் 2 லட்சம் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்துவதாகும். இதற்காக 50 வேலை நாட்களுக்குள் அனைத்து மண்டலங்களிலும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே 60,216 நாய்கள் தடுப்பூசி பெற்றுள்ள நிலையில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட மேலும் சுமார் 1.40 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. கடந்த ஆண்டு 1,47,545 தெருநாய்களுக்கு தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்க மருந்துகள் வழங்கப்பட்டிருந்தன.
இதையும் படிங்க: 100 ஆண்டுகளுக்கு முன்பே ஒலித்த ரேடியோ..! மெட்ராஸ் பிரசிடென்சி ரேடியோ கிளப் பற்றி தெரியுமா..?
ரேபிஸ் தடுப்பு நடவடிக்கையாக மட்டுமின்றி, சென்னையின் பொது சுகாதார பாதுகாப்பை மேம்படுத்தும் திட்டமாகவும் இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் நோய் பரவல் அபாயத்தை குறைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
50 வேலை நாட்களுக்குள் 2 லட்சம் நாய்கள் என்ற இலக்கை அடைய பொதுமக்கள், செல்லப்பிராணி உரிமையாளர்கள் மற்றும் விலங்கு நல அமைப்புகளின் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளது.
