1,352 நாய்களுக்கு தடுப்பூசி நகராட்சி அதிகாரிகள் தகவல்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில், 1,352 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது; 773 நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சி பகுதியில், தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், பொதுமக்களை ரேபிஸ் நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கவும், ரேபிஸ் தடுப்பூசி, இனப்பெருக்க கட்டுப்பாட்டு சிகிச்சை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, 1,365 தெருநாய்கள் கண்டறியப்பட்டன. அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மே மாதம் வரை, 525 தெருநாய்களுக்கும், ஜூன், ஜூலை மாதங்களில், 137 நாய்களுக்கும், ஆக., மாதத்தில், 84 நாய்கள் என மொத்தம், 773 தெருநாய்களுக்கும் இனப்பெருக்க தடுப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. சிகிச்சைக்கு பின்னர் நாய்களுக்கு தேவையான பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நகராட்சி பகுதியில், 1,365 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, 1,352 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதம் உள்ள நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கிறது.
இவ்வாறு, கூறினர்.

