Politics
சமூக நீதி தொடர்பாக வி.சி.க.,வுக்கு யாரும் பாடம் எடுக்க தேவையில்லை திருமாவளவன் காட்டம்
மதுரை: ''சமூகநீதி தொடர்பாக வி.சி.க.,வுக்கு யாரும் பாடம் எடுக்க தேவையில்லை,'' என, மதுரையில் வி.சி.க., தலைவர் திருமாவளவன் பேசினார்.
திருமண நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தேர்தல் களத்தில் கால் நுாற்றாண்டை கடந்த வி.சி.க., தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 'மாநில கட்சி' என்ற அந்தஸ்து பெற்றுள்ளதால் பலரது கண்கள் உறுத்துகின்றன. பொறாமையில் பலர் குறை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். சமூக ஊடகங்களில் வருவதை கவனிக்க நேரமில்லாததால் சட்டசபையில் முதல்வர் விஜய் என்ன பேசினார் என்று உண்மையிலேயே தெரியாது. கருத்தை சொல்வதில் எப்போதும் நான் அவசரம் காட்டியதில்லை. உடனே, திருமாவளவன் கருத்து எதுவும் சொல்லவில்லை. இடைத்தேர்தலில் நிற்பதற்கு திரைமறைவில் பேரம் பேசுவதாக அவதுாறு பரப்புகின்றனர்.
த.வெ.க.,வுக்கு ஆதரவளிக்குமாறு விஜய் என்னை சந்தித்து அமைச்சர் பதவி வழங்க முன்வந்தபோதும், அதில் உடன்பாடு இல்லையென மறுத்தேன். வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்தாலும் தி.மு.க.,வோடு நட்பு பாராட்டவே விரும்பினேன். எனினும் அவதுாறுகள் பரப்பப்பட்டன. அதன்பின் த.வெ.க.,வுடன் 5 ஆண்டுகள் துணை நிற்பதை உறுதிப்படுத்தவே அமைச்சரவையில் இடம்பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
2016ல் கூட தி.மு.க.,வுடன் கூட்டணி சேரவே விரும்பினோம். ''200 இடங்களில் போட்டியிட வேண்டும். உங்கள் எதிர்கால அரசியலை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள்'' என்று ஸ்டாலின் சொன்னதால் தான் வேறு நிலைப்பாட்டை எடுக்க நேர்ந்தது. அப்போது 'சோஷியல் இன்ஜினியரிங்' என்ற பெயரில் பா.ம.க., எடுத்த நிலைப்பாடு நிலைகுலைய வைத்தது. அதன்பிறகே பா.ம.க., பா.ஜ., இருக்கும் அணியில் ஒருபோதும் வி.சி.க., இடம்பெறாது என அழுத்தமாக அறிவித்தேன்.
கடந்த தேர்தலில் ஒரு கட்டத்தில் த.வெ.க.,வின் 'டார்கெட்' தி.மு.க.,வாக இருந்த போது தி.மு.க.,வும் விமர்சித்து அரசியல் செய்திருக்க வேண்டும். அவர்கள் அதை முன்னெடுக்காததால் 'விஜயை ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளை' என விமர்சித்தேன். தற்போது த.வெ.க.,வினர் ஆதரவு கேட்டனர். அதை வழங்கியதால் அமைச்சர் பொறுப்பு வழங்கியுள்ளனர். தி.மு.க., கூட்டணி வென்றிருந்தால் அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்குமா. இன்று காலம் தந்திருக்கிறது. இனி தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சி தான்.
'சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என முதல்வர் விஜய் முன்மொழிந்தபோது, சமூகநீதி என்ற பெயரில் பா.ஜ.,வும் வர முயற்சிக்கும் என்பதால் 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தையும் இடம்பெற வேண்டும் என்றேன். தயக்கமின்றி விஜய்யும் 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி' என அறிவித்தார். எக்காலத்திலும் கருத்தின் அடிப்படையில் யாரும் குழப்ப முடியாது. சமூகநீதி தொடர்பாக வி.சி.க.,வுக்கு யாரும் பாடம் எடுக்க தேவையில்லை. இவ்வாறு பேசினார்.