Politics
"என்னை முதல்வராக்க ஆதவ் அர்ஜுனா திட்டமிட்டார்" – திருமாவளவன் எம்.பி.

திருமாவளவன், விசிக கூட்டணியில் இருந்து வெளியேற திமுகவின் அணுகுமுறையே காரணம் என்றார். தன்னை முதல்வராக்க ஆதவ் அர்ஜுனா திட்டமிட்டதாகவும் அவர் கூறினார்.
கூட்டணியில் இருந்து விசிக வெளியேற திமுகவின் அணுகுமுறைதான் காரணம் எனவும், தன்னை முதல்வராக்க ஆதவ் அர்ஜுனா திட்டமிட்டார் எனவும் எம்.பி. திருமாவளவன் பேசியுள்ளார்.
விசிக தலைவரும், எம்.பி.யுமான தொல். திருமாவளவன், தருமபுரியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திவிட்டு, நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், “கரூர் கூட்ட நெரிசலின்போது விஜய் மீது திமுக அரசு ஏன் வழக்குப் போடவில்லை. விஜய் உட்பட அனைவர் மீதும் வழக்கு போட நான் கூறினேனா இல்லையா?
விஜய் தாமதமாக வந்தது உள்ளிட்டவையே நெரிசலுக்கு காரணம் என வழக்குப் போட்டு இருக்க வேண்டும். விஜய் மீது வழக்கு போட என்ன தயக்கம் இருந்தது?” என பேசியவர், கூட்டணியில் இருந்து விசிக வெளியேற திமுகவின் அணுகுமுறைதான் காரணம் எனவும், கூட்டணிக் கட்சிகளுடன் திமுக இறுக்கமான அணுகுமுறையுடன் நடந்துகொண்டது. மதிமுகவை தனிச்சின்னத்தில் போட்டியிட அனுமதித்து இருக்க வேண்டுமா வேண்டாமா? என பல கேள்விகளை எழுப்பினார்.
குறிப்பாக நிகழ்ச்சியில் பேசிய தொல். திருமாவளவன், “2024 தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து விசிகவை வெளியேற்ற முயற்சி நடந்தது. ஆனால் நான் கூட்டணி உடைய விடமாட்டேன் என்று வெளிப்படையாக சொன்னேன். நம்மோடு இருந்த ஆதவ் ஆர்ஜூனா, ‘அடுத்த முதல்வர் திருமாவளவன்தான் என்று பிரச்சாரம் செய்ய வேண்டும்’ என சொன்னார். மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். கூட்டணியில் இருந்து வெளியில் வாருங்கள் என்று சொன்னார்.
திராவிட அரசியலை வீழ்த்த பாஜக பல சதி முயற்சிகளை செய்கிறது, அதற்கு நாம் இரையாக கூடாது என்று நான் அவரிடம் கூறினேன். நாம் வெளியே வருவதால் திமுக கூட்டணி பலவீனமடைந்து, அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற நாம் காரணமாகிவிடக் கூடாது என்று தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்தேன். பதவி ஆசை இருந்திருந்தால் நான் வேறு மாதிரி முடிவை எடுத்திருக்கலாம். திமுக கூட்டணியை காப்பாற்ற நான் பெரும் சிரத்தை எடுத்துக்கொண்டேன். எவ்வளவோ ஆசை காட்டியும் கூட்டணியை உடைக்க நான் அப்போது உடன்படவில்லை.
2026 தேர்தல் முடிவுக்கு பின்னர் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவை நாம் எடுத்தோமா? அந்தக் கூட்டணியை காப்பாற்றும் முயற்சியை திமுகவால் எடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை, இதை யாரும் விவாதிக்கவில்லை. காங்கிரஸோடு நல்ல உறவைப் பேணிக் காத்திருந்தால், காங்கிரஸ் உடனே கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்குமா?. தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ், இடதுசாரிகளுடன் திமுகவின் உறவு, அணுகுமுறை ஆரோக்கியமானதாக இருந்ததா?” இவ்வாறு பேசியுள்ளார்.
