Crime, law and justice
விதிமீறல் உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட உணவு வணிக நிறுவனங்களில் நடக்கும் சிறப்பு ஆய்வில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துக்குமார் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலராக பணியாற்றிய கலைவாணி அரியலுாருக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து திண்டுக்கல் மாநகராட்சி டாக்டர் முத்துக்குமார் பதவி உயர்வில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு பொறுப்பேற்று கொண்டார்.
தொடர்ந்து அவர் மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு உணவு தயாரிக்கும் கூடம், திண்டுக்கல் நேருஜி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தை பார்வையிட்டார். அங்கு 1,650 மாணவர்களுக்கு தயாரித்த காலை உணவை ஆய்வு செய்தார்.
மாவட்டத்தில் அனைத்து உணவு சேவை நிறுவனங்களிலும் சுகாதாரம், உணவு தரத்தை உறுதி செய்வதற்காக செப்.,1 முதல் நவ., 9 வரை மூன்று மாதம் சிறப்பு ஆய்வு நடக்கிறது.
எனவே உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு அலுவலர்களின் சரிபார்ப்பு பட்டியலை பதிவிறக்கம் செய்து தங்களது நிறுவனங்களில் சுய தணிக்கை செய்து குறைபாடுகளை முன்கூட்டியே நிவர்த்தி செய்ய வேண்டும். பூச்சி, எலி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முறைப்படி மேற்கொள்ளப்பட்டு அதற்கான ஆவணங்கள் பராமரிக்க வேண்டும்.
உணவு கையாளுபவர்கள் அனைவரும் மருத்துவத் தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஒருமுறை உபயோகித்த சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. சமையலறையில் தரமான, துருப்பிடிக்காத கத்திகள், வெட்டுக் கருவிகளையே பயன்படுத்த வேண்டும். ஆய்வின்போது உரிமம் பெறாமல் இயங்கினாலோ, முரண்பாடுகள் கண்டறியப்பட்டாலோ சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.