Lifestyle and human interest
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் :தி.மு.க., எம்.எல்.ஏ., விமர்சனம்
விழுப்புரம்: தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் இல்லாமல், டைவர்ஷன் ஆட்சி தான் நடப்பதாக, பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் 21 சமூக நீதி போராளிகள் மணிமண்டபத்தில் நினைவஞ்சலி செலுத்தியவர் கூறியதாவது:
இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த, 21 தியாகிகளுக்கு தி.மு.க., ஆட்சி காலத்தில் தான் மணிமண்டபம் கட்டப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டில் இறந்த, 21 குடும்பத்தினருக்கும் கருணாநிதி ஆட்சியில் தான் மாதம்ரூ.3,000 உதவித் தொகை மற்றும் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
முதல்வர் விஜயின் லண்டன் பயணத்தின் பல விமர்சனங்கள் எழுவதை திசை திருப்பவே, தி.மு.க., வினர் வீடுகளில் ரெய்டு நடத்தினர்.
த.வெ.க., ஆட்சியில் ரீல்ஸ் மோகம் தான் நடக்கிறது. எதற்கு ஓட்டு போட்டோம் என்று, மக்கள் எண்ணும் அளவிற்கு மோசமான நிகழ்வுகள் நடக்கிறது.
கடந்த தி.மு.க., ஆட்சியில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், வளர்ச்சித் திட்டங்கள் நடந்தன.
தமிழகம் முதலிடத்தில் இருந்தது. இப்போதைய த.வெ.க., ஆட்சியில் எந்த திட்டமும் நடைபெறவில்லை. குறிப்பாக, புதிய விமான நிலையம் அவசியம் என்பதற்காக பரந்துாரில் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதனால் தமிழகம் மேம்படும், விமான நிலைய நெருக்கடி குறையும். ஆனால், அதனை இந்த அரசு ரத்து செய்துள்ளது. பல தொழில் முதலீடுகள் ஆந்திர மாநிலத்திற்கு சென்றுள்ளது.
கடந்த தி.மு.க., ஆட்சியில், தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கு முதல்வர், துறையின் அமைச்சர்கள், அதிகாரிகள் சென்றனர். ஆனால், இப்போது அமைச்சர், செயலர் யாருமே செல்லவில்லை. கடந்த தி.மு.க., ஆட்சியில் போட்ட பழைய ஒப்பந்தத்தை தான், இப்பொழுது போட்டு ஏமாற்றியுள்ளனர். ஆக டைவர்ஷன் ஆட்சி தான் இங்கு நடக்கிறது. மக்கள் வளர்ச்சி திட்டங்கள் இல்லை. தி.மு.க., ஆட்சி காலத்தில் போட்ட விதைகளாக திட்டங்கள் இன்று வளர்ந்து, ஆலமரம் போல் பயன் தருகிறது.
ஏதோ ஒரு மோகத்தில் மக்கள், இந்த ஆட்சியை கொண்டு வந்துவிட்டு, இப்போது தவிக்கின்றனர். தமிழகத்தில் கடந்த, 100 நாள் மோசமான ஆட்சியை விரும்பாத கம்யூனிஸ்ட் கட்சிகள், தங்கள் நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. மாற்றத்தை எதிர்பார்த்து ஆதரவு அளித்த கூட்டணி கட்சியினரும், மக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இடைத்தேர்தல் தேவையில்லாதது என நீதிமன்றமும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.