Politics
கீர்த்தனாவின் பச்சைப் பொய்கள்!

"பட்டாசுத் தொழிலில் லஞ்சத்தை ஒழித்து விட்டோம்… முந்தைய தி.மு.க. ஆட்சியில் லஞ்சம் வாங்கப்பட்டது. அதற்கான மின்னஞ்சல் ஆதாரங் கள் என்னிடம் உள்ளன''’என்று சட்டமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கூறியிருக்கிறார்.
"சிவகாசி பட்டாசுத் தொழிலில் லஞ்சம் ஒழிந்து எல்லாம் சுத்தமாகிவிட்டதா?''’என்ற கேள்வியுடன் பட்டாசு உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்களைச் சந்தித்தோம்.
சட்டமன்றத்தில் ஒலித்த அமைச்சர் கீர்த்தனாவின் குரலுக்கும், சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலைகளின் வாசலில் கேட்கும் குரலுக்கும் இடையே உள்ள இடைவெளியை இவர்களுடைய பேட்டிகள் தெளிவாக உணர்த்துகின்றன.
எங்கே நல்லா இருக்கு?
"23 ஆண்டுகளாக பட்டாசுத் தொழில் சார்ந்த வர்த்தக நிறுவனத்தில் பணியாற்றி வரும் வெங்கடாசலபதி, பட்டாசு தொடர்பான பணி களுக்காக கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலு வலகம், தாலுகா அலுவலகம் என வருவாய்த்துறை அலுவலகங்களுக்கு தொடர்ந்து சென்று வருபவர்.
“இந்த அளவுக்கு மோசமான நிலை இதற்கு முன் இருந்ததில்லை. மூன்று, நான்கு மாதங்க ளாகவே தொழில் பெருமளவில் முடங்கியிருக்கிறது. பல தொழிற்சாலைகள் திறக்கப்படாமல் மூடிக் கிடக்கின்றன. எல்லா பட்டாசுத் தொழிற்சாலை களும் இயங்குகின்றன; விருதுநகர் மாவட்ட மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று அமைச்சர் பேசியதெல்லாம் வெறும் பேச்சு.
இன்னொரு விஷயம். நானறிந்த வரையில், லஞ்சம் குறையவில்லை; மாறாக அதிகரித்திருக்கிறது. சில அதிகாரிகள் நேரடி யாகவும், பலர் இடைத்தரகர்கள் மூலமாகவும் பணம் பெறுகின்றனர். அமைச்சர்களுக்கோ, எம்.எல்.ஏ. போன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கோ இந்த லஞ்ச விவகாரம் உண்மையிலேயே தெரியாமல் இருந்தால், வேறென்ன சொல்வது? களநிலவரத்தை அறியாதவர்களாக இருக் கிறார்கள்''’என்று குற்றம்சாட்டினார்.
விதிகளைப் பின்பற்றுபவர்களையும் ஏன் குறிவைக்கிறீர்கள்?
பட்டாசு உற்பத்தியாளர் சின்னத்தம்பி, பட்டாசு ஆலைகளில் நடைபெறும் ஆய்வுகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
"விதிமீறல் செய்யும் தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுப்பதில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், முறை யாக விதிகளைப் பின்பற்றும் தொழிற்சாலைகளி லும் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்படுவதால் தொழிலாளர்கள் மாதக்கணக்கில் வேலை இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பட்டாசு ஆலை ஆய்வு கள் முதல் பட்டாசுக் கடை உரிமம் வரை லஞ்சம் புரை யோடிப் போயிருக்கிறது. ‘லஞ் சம் இல்லை’ என்று ஆட்சி யாளர்கள் தரப்பு கூறுவதில் துளியளவும் உண்மை இல்லை.
முதலமைச்சர் விஜய், ‘லஞ்சம் கேட்டால் என்னிடம் சொல்லுங்கள்’ என்று கூறினாலும், அதிகாரிகள் மீது புகார் அளித்துவிட்டு மறு நாள் அதே அதிகாரிகளின் முன்னால் தொழில் செய்ய வேண்டிய நிலை இருக்கிறதே? இந்த பயத்தினாலேயே வெளிப்படையாக யாரும் புகார் அளிப்பதில்லை''’என்றார்.
ரீல்ஸ் மோகத்தைத் தாண்டி சிவகாசியின் நிலையைப் பாருங்கள்!
பட்டாசுத் தொழிலின் தட்பவெப்பத்தை நன்கு அறிந்த சமூக ஆர்வலர் முத்து, அமைச்சர் கீர்த்தனாவின் பேச்சுக்கு முற்றிலும் மாறான களநிலவரத்தைச் சுட்டிக்காட்டினார்.
"எங்கே சரியா இருக்கு? இன்னும் சரியெல்லாம் ஆகல. எல்லாமே இன்னும் பாதிக்குப் பாதி வேலையில்லாமல் தான் இருக்காங்க.
அமைச்சர் கீர்த்தனா, அவங்களே ரீல்ஸ் வெளியிட்டு, அவங்களே சந்தோஷப்பட்டுக்கிறாங்க. ஆனா, இங்க மக்கள் சந்தோஷமா இருக்காங்களா? அவங்க வாழ்க்கை எப்படி இருக்கு? இதைப் பற்றிய அக்கறை இருக்கிறதா? ஒரு நடிகர் மீதான மோகத்துல, கவர்ச்சிகரமான திட்டங்களை நம்பி மக்கள் ஓட்டு போட்டுட்டாங்க. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு முந்தைய ஆட்சியைவிட அதிகமான கட்டுப்பாடுகளை விதிக்கிறாங்க. நிர்வாகத்தில் இருக்கிற அதிகாரிகள் தங்களுடைய வேலை என்ன, தங்களுடைய வரம்பு என்ன என்பதையே புரிஞ்சுக்காம செயல்படுறாங்க. விதிமீறல் செய்யும் பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, விதிகளை முறையாகப் பின்பற்றும் பட்டாசு ஆலைகளையும் ஆய்வு என்ற பெயரில் மூடுறாங்க.
இது இப்படியே தொடர்ந்தால், சிவகாசி மக்கள் வேறு வேலை தேடி திருப்பூர், கோயம்புத்தூர்னு வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய நிலை வரும்.
பட்டாசுத் தொழிலாளர்கள் சிப்பாய்கள் மாதிரி. தினமும் வேலைக்குப் போகும்போது உயிரோடு திரும்பி வருவோமா என்பதே தெரியாது. சின்ன உராய்வு ஏற்பட்டால்கூட உயிரிழப்புல கொண்டுபோய் விட்டுடும். இருந்தாலும் வாழ்வாதாரத்துக்காக அந்தத் தொழிலை விட்டுவிடமுடியாமல் வேலை செய்கிறார்கள். அவர்களுடைய உழைப்பையும், வாழ்வாதாரத் தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. பட்டாசுத் தொழிலாளர்களுக்கு அரசு துணையாக இருக்க வேண்டும்.
பட்டாசுத் தொழிலில் தி.மு.க., அ.தி.மு.க. என பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு தொழிலைப் பாதுகாத்துக்கொள்ள அந்தக் கட்சியில் போய் சேர்ந்திருக்கிறார்கள். ஆளும்கட்சியில் சேர்ந்துவிட்டால் பிரச்சினைகள் இல்லாமல் போய்விடும் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். எங்கள் கட்சிக்கு வந்துருங்க… நாங்க உங்களை சேஃப்டி பண்ணிடு றோம்’ என்ற மனநிலைக்கு சிலரை கொண்டு வந்துவிட்டார்கள்.
பட்டாசுத் தொழிலுக்கு ஒரு பிரச்சினை என்றால், முதலில் அரசு நிர்வாகத்திடம் தெரிவிப்பார்கள். அங்கே தீர்வு கிடைக்கவில்லை என்றால் மக்கள் பிரதிநிதிகளிடம் சொல்வார்கள். அதற்குப் பிறகும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் அரசியல் கட்சிகளை அணுகுவார்கள். அவர்கள் பட்டாசுத் தொழிலாளர்களுக்காகப் போராட்டம் நடத்துவது ஜனநாயகத்தில் இயல்பானது. அதை அரசியல் என்கிறாரே அமைச்சர் கீர்த்தனா? இவர்களை எந்த வகையில் சேர்ப்பது?''’ எனக் கேட்டார்.
வேலை இல்லாமல் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்?
ஆறு ஆண்டுகளாக பட்டாசுத் தொழிலில் பணியாற்றிவரும் தங்கம், “"வேலை இருக்கும் நாட்களில் ரூ.300 முதல் ரூ.350 வரை கிடைக்கும். அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது பட்டாசு ஆலைகள் மூடப்படுவதால் வேலை செய்ய முடியாமல் போய்விடுகிறது. வேலை பார்க்க முடியலன்னா… சாப்பாட்டுக்குக்கூட திண்டாட வேண்டியதிருக்கிறது. விஜய்னு இல்ல,…யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுக்கு தொழில் நல்லா ஓடினால்தான் நாங்க நல்லா இருக்க முடியும். அவ்வளவுதான்'' என்றார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாசுத் தொழிலில் பணியாற்றி வரும் மலர்க்கொடி, "இந்த வருஷம் தொழில் ரொம்ப டல்லாதான் இருக்கு. ஆபீசர்கள் வராங்க; ஃபேக்டரியை மூடச் சொல்லிடுறாங்க. அதனால வேலை இல்லாம இருக்கவேண்டிய நிலை. வேலை இல்லாம எப்படி சந்தோஷமா இருக்க முடியும்?''’என்றார்.
உயிரைப் பணயம் வைத்து வேலை, வீட்டில் சாப்பாட்டுக்கே வழியில்லை!
பட்டாசு ஆலைக்கு வெளியே நாம் சந்தித்த பழனிச்சாமி, ‘எடை அலசல்’ பணியைச் செய்பவர். அது என்ன என்று கேட்டபோது, “"மூணுக்கு ஒன்பது''”என்றார். அதாவது, வெடிமருந்துக் கலவையை 3:9 என்ற குறிப்பிட்ட விகிதத்தில் துல்லியமாகக் கலக்கும் பணி. தலையிலிருந்து கால்வரை வெடிமருந்துக் கலவை அப்பியிருந்த அவரது தோற்றமே, பட்டாசுத் தொழிலில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தை உணர்த்தியது.
"நான் 30 வருஷமா பயர் ஒர்க்ஸ்ல வேலை பாக்குறேன். இது பவுடர் எடை அலசுற வேலை. உடம்பு முழுக்க இம்புட்டு கெமிக்கல் பவுடரோட நான் வேலை செஞ்சுதான் பிள்ளைகுட்டிகளை காப்பாத்த வேண்டி யிருக்கு. ஆனா… ஆபீசர் ரெய்டுனால அடிக்கடி ஃபேக்டரிய மூடி சீல் வச்சிர்றாங்க. அந்த நேரத்துல வேலை எதுவும் இல்லாம நாங்க வீட்டிலே யே இருக்கணும். அப்ப சாப்பாட்டுக்கு என்ன செய்ய? ரொம்ப சிரமமா இருக்கு. நாங்க (பட்டாசுத் தொழிலாளர்கள்) எல்லாரும் நல்லா இருக்கோம்னு சட்டமன்றத்துல அமைச்சர் மேடம் சொல்றாங்க. அது எல்லாம் பொய். நாங்க நல்லா இருக்கோமா என்று அவங்க வந்து பார்த்தாங்களா? ஃபேக்டரிக்கு ஃபேக்டரி வந்து பார்த்திருந்தா தெரியும். தொழிலாளர்களை நேர்ல வந்து பார்த்தால்தான் எங்களோட கஷ்டநிலைமை அவங்களுக்குத் தெரியும்''’என்றார் பரிதாபமாக.
சட்டமன்றத்தில் பட்டாசுத் தொழில் நல்ல நிலையில் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், களநிலவரம் அதற்கு நேர்மாறாக இருக்கிறது. தொழிற்சாலைகள் மூடப்படுவதால் தொழிலாளர்களின் வேலை பறிபோகிறது; வருமானம் இல்லாமல் குடும்பங்கள் திண்டாடுகின்றன.
சிவகாசியின் பட்டாசுத் தொழிலும், அதை நம்பி வாழும் தொழிலாளர்களும் இன்று கேட்பது ஒன்றைத்தான். தொழிலை பாதுகாத்து, தொழிலாளர்களின் வாழ்க்கையையும், உயிரையும் காப்பாற்றுங்கள். அதற்காக உண்மையான அக்கறையோடு செயல்பட்டு, விபத்துகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மனசாட்சி இல்லாமல் லஞ்சத்தில் ஊறிக்கிடக்கும் அதிகாரிகளை மாற்றுங்கள்.
பட்டாசுத் தொழிலையும், தொழிலாளர்களின் உயிரையும் பாதுகாப்பது அரசின் கடமை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)