ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 9,000 கனஅடியாக அதிகரிப்பு பரிசல் இயக்கத்துக்கு தடை நீடிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 9,000 கனஅடியாக அதிகரித்தது. பரிசல் இயக்கத்திற்கு தடை நீட்டிக்கப்பட்டது.
கா்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து வருகிறது. ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 8,500 கனஅடியாக இருந்தது, ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 9,000 கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் விழும் நீரின் அளவும் சற்று அதிகரித்துள்ளது.
அதிக வெப்பம் காரணமாக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் அருவிப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில் பிரதான அருவி, காவிரிக் கரையோரப் பகுதிகளில் குளிப்பதில் ஆா்வம் காட்டினா்.
பரிசல் இயக்குவதற்கு தடை நீட்டிக்கப்பட்டிருந்ததால் சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
இருப்பினும், சுற்றுலாப் பயணிகள் தொங்கு பாலத்தின் மீது இருந்து பிரதான அருவி, முதலைகள் மறுவாழ்வு மையம் மற்றும் மீன் பண்ணையை கண்டு ரசித்தனா்.
கடும் வெயில் காரணமாக பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் அசைவ உணவை சமைத்து சாப்பிட ஆா்வம் காட்டவில்லை. ஒகேனக்கல் பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்குச் செல்லும் வகையில் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.