அறுவடைக்கு பின்னும் மகசூல் கொடுக்கும் மைசூர் மல்லி ரக நெல் சாகுபடி
மைசூர் மல்லி ரக நெல் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எம்.மணிவண்ணன் கூறியதாவது:
மணல் கலந்த களிமண் நிலத்தில், மைசூர் மல்லி பாரம்பரிய நெல் ரகத்தை, இயற்கை முறையில் சாகுபடி செய்துள்ளேன். இது, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பாரம்பரிய ரக நெல். இந்த ரக நெல், 120 நாளில் மகசூலுக்கு வரும் சன்னரகமாகும்.
இந்த ரக நெல், சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய மூன்று பருவங்களிலும் சாகுபடி செய்யலாம். அதற்கேற்ப நீர் பாசனம் வசதி இருக்க வேண்டும்.
ஏக்கருக்கு, இயற்கை உரம் போட்டு முறையான நீர் பாசனம் செய்தால், 18 நெல் மூட்டைகள் வரையில் அறுவடை செய்யலாம். ரசாயண உரங்களை பயன்படுத்தினால், 35 முட்டைகள் வரை கிடைக்கும்.
ஆனால், இயற்கை உரம் போட்டு நீர் பாசனம் செய்யும்போது, இந்த மைசூர் மல்லி நெல் ரகத்தை, அரிசியாக மாற்றி வீட்டுத் தேவைக்கு உபயோகப்படுத்தலாம். மேலும், அவல், புட்டு மாவு உள்ளிட்ட மதிப்புக்கூட்டிய பொருளாக தயாரிக்கும் போது, கூடுதல் வருவாய் ஈட்ட முடியும்.
குறிப்பாக, மைசூர் மல்லி ரக நெல் அறுவடை செய்த நிலத்தில், தண்ணீரை பாய்ச்சும் போதும், தாளடியில் நெல் முளைப்பு ஏற்பட்டு, மீண்டும் மகசூலுக்கு வரும் தன்மை உடையதாக இருக்கிறது.
கடந்த நவரை பருவத்தில், மைசூர் மல்லி ரக நெல்லை சாகுபடி செய்துவிட்டு, அறுவடைக்கு பிறகு தாளடிக்கு தண்ணீர் மட்டுமே பாய்ச்சினேன்.
அந்த வயலில் நெற்கதிர் ஆள் உயரத்திற்கு வளர்ந்து மகசூல் கொடுத்துள்ளது. எந்த ஒரு உரமும் போடவில்லை. நவரை பருவத்தில் எடுத்த மகசூல் எடுக்க முடிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
96558 27878.