Lifestyle and human interest
குப்பை அள்ளுங்க... குடிநீர் வரல... மதுக்கடை வேண்டாம்! போராட்டக் களமாக மாறிய கலெக்டர் அலுவலக வளாகம்

திருப்பூர்:குறைகேட்பு கூட்ட நாளான செப் 9, குப்பை பிரச்னை, குடிநீர் பிரச்னை, மதுக்கடைக்கு எதிர்ப்பு, உதவித்தொகை உயர்வு கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் என, திருப்பூர் கலெக்டர் அலுவலக பகுதியில் ஒரே நேரத்தில் நான்கு போராட்டங்கள் நடைபெற்றன.
திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்,கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே, மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அனைத்து அரசு துறை அலுவலர்களும் அரங்கில் இருந்தனர். வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள், குப்பை பிரச்னை, குடிநீர் பிரச்னை, மதுக்கடையை அகற்றக் கோருவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக மனு அளிக்க திரண்டு வந்தனர்.
இதனால், கலெக்டர் அலுவலக பிரதான நுழைவாயில் கதவுகளை போலீசார் மூடி, மக்களை தடுத்து நிறுத்தினர். இதனால், போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பூண்டி நகராட்சி பகுதி மக்கள், பாறைக்குழியில் திருப்பூர் மாநகராட்சி குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணக் கோரி, குண்டடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தொட்டியந்துறை, நிறையூர் உள்ளிட்ட மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்ததால், ஒவ்வொரு பிரச்னை தொடர்பாகவும் தலா 10 பேரை மட்டும் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் அனுமதித்து, குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிக்கச் செய்தனர்.
குடிநீர் பிரச்னை தொடர்பாக மக்கள் அளித்த மனு:
குண்டடம் ஒன்றியம், சடையபாளையம் கிராமம், நிறையூரில் 35 ஆண்டுகள் பழமையான தண்ணீர் தொட்டி உள்ளது. ஆனால், சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. ஒரு குடம் தண்ணீரை 10 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. ஜல்ஜீவன் திட்ட இணைப்பும் வழங்கப்படவில்லை. மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் தவித்து வருகிறோம். அரசு திட்டங்கள் வாயிலாக, சீரான இடைவெளியில் போதுமான அளவு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மதுக்கடை அகலுமா?
இந்திய மாதர் சம்மேளனம் திருப்பூர் புறநகர் மாவட்டக்குழு சார்பில், மக்கள் திரண்டு வந்து மதுக்கடையை அகற்றக் கோரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குண்டடம் ஒன்றியம், வட சின்னாரிபாளையம் ஊராட்சி, மேட்டுப்பாறையில், டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையால், 16 கிராமங்களில் வசிக்கும் மக்கள், குறிப்பாக பெண்கள், நிம்மதியை இழந்துள்ளனர். மதுக்டையினால், இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். குடும்பங்களில் சண்டை, வன்முறை சம்பவங்கள் அன்றாட நிகழ்வாகிவிட்டன. மதுப்பழக்கத்தால், 31 பெண்கள் தங்களது கணவர்களை இழந்துள்ளனர்.
பெண்கள் பாதுகாப்பு மற்றும் குடும்ப நலனை பாதுகாக்கும் விஜய் தலைமையிலான அரசு, எங்கள் பகுதியில் செயல்படும் மதுக்கடையை நிரந்தரமாக மூடுவதற்கும், புதிய மதுக்கடை திறக்காமல் இருப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சார்பில், கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன், பல்லடம் - திருப்பூர் ரோட்டில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் திரண்டு, மாதாந்திர உதவித்தொகையை ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்கக் கோரி கோஷமிட்டனர். தொடர்ந்து, ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனையடுத்து, 30 பெண்கள் உட்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
குப்பை பிரச்னை, குடிநீர் பிரச்னை, டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிர்ப்பு, மாற்றுத்திறனாளிகள் போராட்டம் என ஒரே நேரத்தில் நான்கு போராட்டங்கள் நடைபெற்றன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதனால், திருப்பூர் கலெக்டர் அலுவலக பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
மதுக்டையினால், ஏராளமான இளைஞர்கள் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். குடும்பங்களில் சண்டை, வன்முறை சம்பவங்கள் அன்றாட நிகழ்வாகிவிட்டன. மதுப்பழக்கத்தால், 31 பெண்கள் தங்களது கணவர்களை இழந்துள்ளனர்