Politics
பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிரான வழக்கு : தமிழக அரசுக்கு எச்சரிக்கை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நினைவாகச் சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அதாவது இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு வழங்கிய சுற்றுச்சூழல் ஒப்புதலை எதிர்த்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வெண்ணிலா தாயுமானவன், மீனவர் பாரதி மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 2022ஆம் ஆண்டே இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டும், தமிழ்நாடு அரசு கடந்த 4 ஆண்டுகளாக அறிக்கை தாக்கல் செய்யாமல் தொடர்ந்து அவகாசம் மட்டுமே கோரி வருகிறது எனப் பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்தது,
மேலும், மாநிலத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், இத்திட்டம் தொடர்பாகத் தற்போதைய அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பிய பசுமைத் தீர்ப்பாயம், வரும் அக்டோபர் 29ஆம் தேதிக்குள் இதுகுறித்த விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யத் தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து இந்த, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


