Politics
செருப்பால் அடிக்க பாய்ந்த துணை கலெக்டர் டிரான்ஸ்பர்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே இலங்கை அகதியை செருப்பால் அடிக்க பாய்ந்த தனி துணை கலெக்டர் கலைமன்னன், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
ராமநாதபுரம் மண்டபம் முகாமில், 800க்கு மேற்பட்ட இலங்கை அகதிகள் வசிக்கின்றனர். இங்குள்ள அகதி ஜெகநாதன், 50, மருத்துவ சிகிச்சைக்காக இரு நாட்கள் விடுப்பு கேட்டது தொடர்பான விவகாரத்தில், ஜெகநாதனை தரக்குறைவாக பேசிய துணை கலெக்டர் கலைமன்னன், 'செருப்பால் அடிப்பேன்' என செருப்பை கழற்றுவது போல், காலை துாக்கி பேசினார். இந்த வீடியோ பரவியது.
இதை கண்டித்து அகதிகள், முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போலீசார் சமரசம் செய்தனர். இச்சம்பவத்திற்கு நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து, கலைமன்னனை கைது செய்ய வலியுறுத்தினர்.
இதையடுத்து, கலைமன்னனை காத்திருப்போர் பட்டியலுக்கு தமிழக அரசு மாற்றியது. இவருக்கு பதிலாக, கங்காதேவி தனித்துணை கலெக்டராக நேற்று நியமிக்கப்பட்டார்.