Lifestyle and human interest
தனியார் விடுதி உரிமையாளர் கொலை வழக்கில் 5 பேர் கைது

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே தனியார்விடுதி உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையம், பாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (எ) அஜித், 25;
புதுச்சேரி–சென்னை இசிஆரில்., கோட்டக்குப்பத்தை அடுத்த பொம்மையார்பாளையத்தில் பயணிகள் தங்கும் விடுதி நடத்தி வந்தார்.
கடந்த 6ம் தேதி, இரவு தனது பிறந்த நாளை விடுதியின் அருகிலுள்ள திறந்தவெளி மைதானத்தில் நண்பர்களுடன் கொண்டாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு அஜித்துக்கும், மற்றொரு கும்பலுக்கும் தகராறு ஏற்பட்டது. அங்கிருந்து புறப்பட்ட கும்பல், அஜித் மீது ஆத்திரம் கொண்டுள்ளது. இதனிடையே அந்த கும்பல், அஜித் ஓட்டல் எதிரில் அவரை வழிமறித்து வெட்டி விட்டு தப்பியோடியது.
அதில் ரத்த காயத்தில் கிடந்த அவரை கோட்டக்குப்பம் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக காலாப்பட்டு தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சம்பவத்தன்று, அதே பகுதியை சேர்ந்த ஹரிராஜ் என்பவர் அவரது மனைவியுடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, அஜித்தின் நண்பர்கள், ஹரிராஜை கேலி செய்துள்ளனர்.
இதனால், ஹரிராஜிக்கும், அஜித் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையை சமரசம் செய்த, அஜித், திடீரென ஹரிராஜை தாக்கி உள்ளார். இதனால் அஜித் மீது ஆத்திரமடைந்தை ஹரிராஜ், அஜித்தை வெட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி ஹரிராஜ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த, 4 பேர், விடுதிக்குள் நுழைந்து, அங்கிருந்த அஜித்தை வெட்டியுள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பித்து அஜித் வெளியே ஓடி வந்து கீழே விழுந்துள்ளார். அவரை விடாமல் அந்த கும்பல் பயங்கரமாக ஆயுதங்களால் வெட்டி விட்டு தப்பித்தது தெரிய வந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக பொம்மையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஹரிராஜ், 23; பிரதீஷ், 20; லோகஷ், 22; பூபதி(எ) சஞ்சய்,22; சஞ்சய், 25; ஆகியோரை கைது செய்தனர்.