மாற்றுப்பாதை முறையாக இல்லாததால் அலைக்கழிப்பு :பழநி - புது தாராபுரம் ரோடு ரயில்வே கிராசிங்கில்...

பழநி:பழநி புது தாராபுரம் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடக்கும் நிலையில் உள்ளூர் மக்கள் சென்றுவர மாற்றுப்பாதை முறையாக இல்லாததால் பல கி.மீ., துாரம் சுற்றிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது.
பழநி புது தாராபுரம் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் பல ஆண்டு கால கோரிக்கைக்கு பின் தற்போது நடந்து வருகிறது. இந்த பணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நான்கு வழிச்சாலையில் புது தாராபுரம் ரோடு மொல்லம் பட்டி பிரிவு, பழைய தாராபுரம் ரோடு மானுார் பிரிவு, உடுமலை ரோடு தாழையூத்து, திண்டுக்கல் ரோடு மாட்டுப்பாதை ஆகிய பகுதிகள் வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு கனரக வாகனங்கள் பழநி நகருக்குள் வர அறிவுறுத்தப்பட்டது. இலகுரக வாகனங்கள் சங்கிலி கேட் வழியாக நகருக்குள் வர அறிவுறுத்தப்பட்டது. போலீசார் கண்காணித்து மாற்று பாதையில் வாகனங்கள் அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில் மேம்பால பணிகள் நடக்கும் பகுதிக்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளான டி.எஸ்.பி., கேம்ப், கலிக்கநாயக்கன்பட்டி, குபேரப்பட்டினம், சத்யா நகர், விட்டல் நகர் பகுதி மக்கள் முறையான மாற்றுப்பாதை இல்லாததால் 3 முதல் 4 கி.மீ., துாரம் சுற்றிக்கொண்டு வரும் நிலை உள்ளது. மேலும் அருகே உள்ள அலுவலகங்கள், பள்ளிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
எனவே ரயில்வே மேம்பால பணிகள் நடக்கும் இடத்தில் மாற்றுப்பாதையை முறையாக அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கருப்புசாமி, பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர், பூலாம்பட்டி.
6 மாதங்களுக்கு மேல் நடக்கும் ரோடு பணிகளுக்கு மாற்றுப்பாதை அமைக்கும் நடைமுறை இருந்து வருகிறது. பழநி புது தாராபுரம் ரோடு ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் 2 ஆண்டுகளுக்கு மேல் நடந்தும் அதற்கான மாற்றுப்பாதை முறையாக அமைக்கப்படவில்லை. அதற்கான திட்டம் இருப்பதாகவும் தெரியவில்லை. போலீசார் சார்பில் பல கி.மீ., துாரம் சுற்றி வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டிருந்த போதிலும் அதுகுறித்து மக்களிடம் கருத்து கேட்கவில்லை. அவ்வழியாக டூவீலர்கள் செல்லும் போது காற்றில் துாசி பரப்பதால் அவதிப்படும் நிலை தொடர்கிறது.
கார்த்திகேயன், தனியார் ஒப்பந்ததாரர், டி.எஸ்.பி., கேம்ப்:
எங்கள் பகுதி ரயில்வே மேம்பாலம் பணி நடக்கும் பகுதிக்கு அருகில் உள்ளது. மாற்றுப்பாதை இல்லாததால் காலை, மாலை நேரத்தில் பள்ளி, அலுவலகங்களுக்கு செல்பவர்கள் சிரமம் அடைகின்றனர். அருகில் உள்ள பள்ளிக்கு பல கி.மீ., துாரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை உள்ளது. நடந்து செல்லும் மாணவர்கள் காற்றில் பறக்கும் துாசியால் அவதிப்படுகின்றனர்.
வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் விபரம் தெரியாமல் மேம்பால பணிகள் நடக்கும் பகுதி வரை வந்து திரும்பிச்செல்லும் நிலையும் ஏற்படுகிறது. பணிகள் நடக்கும் இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக்கான எந்தவித அறிவிப்பும் இல்லை.
பழநி புது தாராபுரம் ரோட்டில் ரயில்வே மேம்பால கட்டுமான பணிகள் நடக்கும் இடத்தில் தற்போது டூவீலர்கள் செல்ல பயன்படுத்தும் மண் சாலையை தார் சாலையாக மாற்றி அமைக்க வேண்டும். பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ், டூவீலர்கள் தடையின்றி செல்லும் வகையில் முறைப்படுத்த வேண்டும். போலீசார் அறிவித்த போக்குவரத்து மாற்றம் குறித்து வெளியூர் நபர்களுக்கு தெரியும் வகையில் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகளை வரைபடங்களுடன் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமான பணிகள் நடக்கும் இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பான நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.