Crime, law and justice
சட்டவிரோத இறால் பண்ணைகளால் திருவாரூரில் நீரியல் அமைப்பு பாதிப்பு ஐகோர்ட்டில் நிபுணர் குழு தகவல்
சென்னை: 'திருவாரூர் மாவட்டத்தி ல், தடை செய்யப்பட்ட பகுதிகளில் இயங்கும், சட்டவிரோத இறால் பண்ணைகளால், சுற்றுச்சூழல் மட்டுமின்றி, இயற்கை நீரியல் அமைப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாலுகா, தில்லை விளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், சட்ட விரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளை அகற்றக்கோரி, தில்லை விளாகம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் யோகநாதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி, நிபுணர் குழு அமைத்து, அப்பகுதிகளில் இறால் பண்ணைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய ஏதுவாக, வழக்கறிஞர் ஆணையராக யோகேஸ்வரனை நியமித்து உத்தரவிட்டார்.
அதன்படி, வழக்கறிஞர் யோகேஸ்வரன், தமிழ்நாடு மாநில ஈர நில ஆணையத்தின் துணை வனப் பாதுகாவலர் டாக்டர் போஸ்லே சச்சின் துக்காரம், 'நீரி' விஞ்ஞானி கார்த்திக் ரகுநாதன் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு, இறால் பண்ணைகளை நேரில் ஆய்வு செய்து, உயர் நீதிமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
தி ருவாரூர் மாவட்டம், தில்லை விளாகம், முத்துப்பேட்டை, தொண்டியக்காடு, துரைக்காடு மற்றும் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள, இறால் பண்ணைகளை புவியியல் சார்ந்த புகைப்படங்களுடன் ஆய்வு செய்ததில், பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் இயங்கும், சட்டவிரோத இறால் பண்ணைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால், சுற்றுச்சூழல் மட்டுமின்றி, இயற்கை நீரியல் அமைப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில் தவறான தகவல்களை அளித்து, இறால் பண்ணைகளின் உரிமையாளர்கள் பதிவு பெற்றுள்ளனர்.
அதிகாரிகளும், சட்ட விரோதமாக செயல்படும், இறால் பண்ணைகளுக்கு சாதகமாக அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரத்தில், உயர் நீதிமன்றம் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த அறிக்கையை பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கில் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தையும், ஒரு எதிர்மனுதாரராக சேர்க்க, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வி.காசிநாதபாரதிக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்.15ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.